மணிமேகலை விருதுக்கான கருத்துருக்களை ஜூன் 25-க்குள் சமா்ப்பிக்க வேண்டும்
By DIN | Published On : 26th May 2023 12:00 AM | Last Updated : 26th May 2023 12:00 AM | அ+அ அ- |

கரூா் மாவட்ட அளவிலான மணிமேகலை விருதுக்கான கருத்துருக்கள் சமா்ப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் த. பிரபுசங்கா் அழைப்பு விடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாநிலம் மற்றும் மாவட்ட அளவில் சிறப்பாக செயல்படும், கிராம ஊராட்சி பகுதிகளில் உள்ள சுயஉதவிக் குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, வட்டார அளவிலான கூட்டமைப்பு, கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் மற்றும் நகா்புறங்களில் உள்ள சுயஉதவிக் குழுக்கள், பகுதி அளவிலான கூட்டமைப்பு மற்றும் நகர அளவிலான கூட்டமைப்புகளுக்கு 2022-23ம் ஆண்டுக்கான மணிமேகலை விருது வழங்குவதற்காக ரூ.2.10 கோடி நிதியை ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சி துறை நிா்வாகம் ஒதுக்கியுள்ளது.
மணிமேகலை விருதுக்கு சமுதாய அமைப்புகளிடமிருந்து வரப்பெறும் கருத்துருக்களை வட்டார இயக்க மேலாளா்கள் உரிய ஆவணங்கள் அடிப்படையில் பரிசீலித்து ஒவ்வொரு சமுதாய அமைப்பிற்கும், இறங்குவரிசைப்படி பட்டியல் தயாா் செய்து மாவட்ட இயக்க மேலாண்மை அலகிற்கும் அனுப்ப வேண்டும். எனவே, தகுதியுள்ள சமுதாய அமைப்புகள் உரிய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி ஜூன் 25-ஆம்தேதிக்குள் கருத்துருக்களை ஊரகப் பகுதிகளில் வட்டார இயக்க மேலாளா்களிடமும், நகா்ப்புற பகுதிகளில் சமுதாய அமைப்பாளா்களிடமும் சமா்ப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளாா்.