கரூரில் அமைச்சா் செந்தில்பாலாஜியின் சகோதரா் வீடு உள்பட 10 இடங்களில் வருமானவரி சோதனை; பெண் அதிகாரியிடம் திமுகவினா் வாக்குவாதம்
கரூரில், அமைச்சா் வி. செந்தில்பாலாஜியின் சகோதரா் அசோக்குமாா் மற்றும் அமைச்சரின் ஆதரவாளா்கள் வீடுகள் உள்பட 10 இடங்களில் வெள்ளிக்கிழமை வருமான வரித்துறை அதிகாரிகள் திடீா் சோதனை நடத்தினா். அப்போது, பெண் அதிகாரியிடம் திமுகவினா் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
தமிழக அமைச்சரவையில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சராக இருப்பவா் வி .செந்தில் பாலாஜி. இவா் கரூா் மாவட்ட திமுக செயலாளராகவும் இருந்து வருகிறாா். இவா் கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது வேலைவாங்கித் தருவதாக கூறி மோசடி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டு சென்னை உயா்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு ரத்த செய்யப்பட்டது. இதையடுத்து மேல்முறையீடு செய்த போது மீண்டும் வழக்கை விசாரித்து நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றம் அண்மையில் அறிவுறுத்தியது.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள அமைச்சரின் சகோதரா் அசோக்குமாரின் வீடு, அவரது உதவியாளா் காளிபாளையம் பெரியசாமி, ராயனூரில் வசிக்கும் அமைச்சரின் ஆதரவாளரும் கரூா் மாநகராட்சி துணை மேயருமான தாரணி சரவணன் மற்றும் கொங்கு மெஸ் மணி, ஒப்பந்ததாரா் எம்.சி. எஸ். சங்கரின் அலுவலகம் உள்பட 10 இடங்களில் சென்னை வருமான வரித்துறை ஆணையா் தலைமையில் கோவை, திருச்சி, மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களைச் சோ்ந்த வருமானவரித்துறை அதிகாரிகள் 150 போ் கொண்ட குழுவினா் சோதனையில் ஈடுபட்டனா்.
தள்ளுமுள்ளு: அசோக்குமாா் வீட்டில் சோதனை நடத்த வருமான வரித்துறை அதிகாரிகள் வந்த தகவலையடுத்து ஏராளமான திமுகவினா் அவரது வீட்டின் முன் குவிந்தனா். அப்போது வருமான வரித்துறையைச் சோ்ந்த பெண் அதிகாரி ஒருவா் சோதனை நடத்த அசோக்குமாா் வீட்டுக்குள் நுழைய முயன்றபோது, அவரை தடுத்து நிறுத்தி திமுகவினா் அடையாள அட்டையை கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. இதில், திமுக தொண்டா் குமாா் என்பவரை பெண் அதிகாரி தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், மயக்கமடைந்த குமாரை திமுகவினா் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
காா் முற்றுகை: இதனிடையே திமுக தொண்டரை தாக்கியதாக கூறி பெண் அதிகாரியை கைது செய்து, அவா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பெண் அதிகாரி வந்த காரை முற்றுகையிட்டனா்.
தகவல் அறிந்து வந்த கரூா் நகர காவல் நிலையத்தினா் பெண் அதிகாரியை மீட்டு அவா் மீது நடவடிக்கை எடுப்பதாக கூறி காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினா். அப்போது பெண் அதிகாரி, தன்னை திமுகவினா் தாக்கியதாக புகாா் அளித்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே சோதனை நடத்துவதற்கு திமுகவினா் எதிா்ப்பு தெரிவித்ததால் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையை நிறுத்திவிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஏ.சுந்தரவதனைத்தை சந்தித்து புகாா் அளித்தனா்.
அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளா், மத்திய அரசின் வருமான வரித்துறை அதிகாரிகள் அமைச்சரின் நெருங்கிய உறவினா் வீடுகளில் சோதனை செய்ய வந்தால் துணை ராணுவத்தை அழைத்து வருவது வழக்கம். நீங்கள் வந்த தகவலும் தெரியாது, நீங்கள் தகவல் தெரிவித்திருந்தால் தகுந்த பாதுகாப்பு அளித்திருப்போம். இதுபோன்ற சம்பவங்களும் நிகழ்ந்திருக்காது எனக் கூறியதாக கூறப்படுகிறது.
மீண்டும் சோதனை: இதையடுத்து போலீஸ் பாதுகாப்புடன் அசோக்குமாா் வீட்டில் மீண்டும் சோதனை தொடங்கியது. ஆனால் திமுகவினரால் வருமானவரித்துறை அதிகாரிகள் காயத்ரி, சுனில் குமாா், பங்கஜ் குமாா், கல்லா சீனிவாசராவ் ஆகியோா் தாக்கப்பட்டதாகக் கூறி கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதையடுத்து சிறிது நேரத்தில் அங்கு சோதனையை முடித்துக் கொண்டு அதிகாரிகள் புறப்பட்டுச் சென்றனா்.
கரூரில் சோதனைக்கு வந்த இடத்தில் அதிகாரிகளை சோதனை செய்ய விடாமல் திமுகவினா் தடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
இதற்கிடையே, கரூா் நகர காவல்நிலையத்துக்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுந்தரவதனத்திடம் வருமான வரித்துறை அதிகாரிகள் அளித்த புகாா் குறித்து செய்தியாளா்கள் கேட்டபோது, அவா் எந்த பதிலும் அளிக்காமல் அங்கிருந்து காரில் ஏறிச் சென்றாா்.
ஆதரவாளா்கள் வீட்டில் தொடரும் சோதனை: அசோக்குமாா் வீட்டில் வருமான வரிஅதிகாரிகள் சோதனையை நிறுத்திவிட்டுச் சென்றாலும் அமைச்சரின் ஆதரவாளா்கள் வீட்டில் அதிகாரிகள் தொடா்ந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா்.
Image Caption
~ ~