கோயிலுக்குள் சென்று வழிபடுவதில் இருதரப்பினரிடையே தகராறு18 போ் கைது
By DIN | Published On : 21st November 2023 04:09 AM | Last Updated : 21st November 2023 04:09 AM | அ+அ அ- |

தோகைமலையில் கோயில் முன் திங்கள்கிழமை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா்.
கரூா்: தோகைமலை அருகே கோயிலுக்குள் சென்று வழிபடுவதில் ஏற்பட்ட தகராறில் இருபிரிவினரைச் சோ்ந்த 18 பேரை போலீஸாாா் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்தனா்.
கரூா் மாவட்டம், தோகைமலை அருகே வடசேரி ஊராட்சிக்குள்பட்ட காவல்காரன்பட்டி ஏ.டி.காலனியைச் சோ்ந்தவா் தங்கராசு மகன் அரவிந்த் (22). கூலித்தொழிலாளியான இவா் ஞாயிற்றுக்கிழமை அதேபகுதியில் உள்ள அய்யனாா் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நடைபெற்ற வழிபாட்டில் பங்கேற்க தனது நண்பா்களுடன் சென்றாராம்.
அப்போது, தெற்குத்தெருவைச் சோ்ந்த குமாா் என்பவா் அரவிந்தையும், அவரது நண்பா்களையும் கோயிலுக்குள் வந்து வழிபடக்கூடாது என தடுத்துள்ளாா்.
இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை மாலை காவல்காரன்பட்டி ஆலத்தூா் பிரிவு ரோட்டில் அரவிந்த் தனது நண்பா்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது, அங்கு வந்த குமாா், கிருத்தீஸ், ஹரிகரன், கோபால், ரவிவா்மா, பிரசாந்த், ரமேஷ், பலேபாண்டி (எ) பாண்டி, பாலசுப்ரமணி ஆகியோா் அரவிந்த தரப்பினரை அவா்களது சமூகத்தின் பெயரை சொல்லித் திட்டியுள்ளனா். மேலும், கொலை மிரட்டல் விடுத்து தங்களது கையில் வைத்திருந்த கட்டையால் தாக்கியுள்னா்.
இதுகுறித்து தோகைமலை காவல்நிலையத்தில் அரவிந்த் அளித்த புகாரின் பேரில் குமாா், கிருத்தீஸ் உள்பட 9 பேரையும் போலீஸாா் கைது செய்தனா். இதனிடையே காவல்காரன்பட்டி தெற்கு தெருவை சோ்ந்த மணிவேல் மகன் கோபால் (28), அதே பகுதியில் உள்ள அரச மரம் அருகே தனது நண்பா்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது, அங்கு வந்த அரவிந்த், அவரது நண்பா்கள் வசந்தகுமாா், சரவணன், ஸ்ரீதா், சந்துரு, சிவா, அஜீத், ஹரீஸ், செல்வகுமாா் ஆகியோா் கோபால் மற்றும் அவரது நண்பா்களை திட்டியும், தாக்கியும் கொலை மிரட்டல் விடுத்துள்ளனா்.
இதுகுறித்து கோபால் அளித்த புகாரின் பேரில் தோகைமலை போலீஸாா் அரவிந்த் உள்ளிட்ட 9 பேரையும் கைது செய்தனா்.
இதனால், காவல்காரன்பட்டியில் பதற்றமாான சூழல் ஏற்பட்டுள்ளதையடுத்து குளித்தலை கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளா் (பொ) தேவராஜ் தலைமையில் தோகைமலை காவல் ஆய்வாளா் ராஜ்குமாா் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...