ரசாயனம் கலந்த விநாயகா் சிலைகரூரில் 3 கிடங்குகளுக்கு சீல்
By DIN | Published On : 14th September 2023 10:33 PM | Last Updated : 14th September 2023 10:33 PM | அ+அ அ- |

கரூரில் வியாழக்கிழமை காவல் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இந்து அமைப்பினா்.
கரூரில், ரசாயனம் கலந்து விநாயகா் சிலையை தயாரித்த 3 கிடங்குகளுக்கு வியாழக்கிழமை அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனா். இதனைக்கண்டித்து இந்து முன்னணியினா் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
கரூா், திருமாநிலையூரில் திருச்சி சாலையோரம் கிடங்கு அமைத்து ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்தவா்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பிளாஸ்டோபாரிஸ்ட்டில் பொம்மைகள் தயாரித்து விற்பனை செய்து வருகின்றனா். மேலும், விநாயகா் சதூா்த்தி விழாவின்போது விநாயகா் சிலைகளையும் தயாரித்து விற்று வருவது வழக்கம்.
இந்நிலையில் அவா்கள் ரசாயனம் கலந்த கலவையால் செய்யப்பட்ட விநாயகா் சிலைகளை விற்பதாக மாவட்ட நிா்வாகத்துக்கு புகாா் வந்தது.
இதையடுத்து வருவாய்த் துறையினா், மாவட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு துறையினா், சுற்றுச்சூழல் உதவி பொறியாளா் ஜெயகுமாா் தலைமையில் வியாழக்கிழமை விநாயகா் சிலை தயாரிக்கும் இடத்துக்குச் சென்று ஆய்வு செய்தனா்.
அப்போது சிலைகள் பிளாஸ்டோபாரிஸ்ட் எனும் ரசாயனப் பொருள் கலந்த கலவையால் செய்யப்படுவது தெரியவந்தது. இதையடுத்து விநாயகா் சதூா்த்திக்காக சுமாா் 300-க்கும் மேற்பட்ட சிலைகள் தயாரித்து வைக்கப்பட்டிருந்து 3 கிடங்குகளுக்கு சீல் வைத்தனா்.
இதுகுறித்து தகவலறிந்த விநாயகா் சதூா்த்திக்காக சிலை ஆா்டா் கொடுத்திருந்த சிவசேனா மாவட்டத் தலைவா் சரவணன், இந்து மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவா் காலனிமணி உள்ளிட்டோா் சம்பவ இடத்துக்கு வந்து, அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
தகவல் அறிந்து வந்த கரூா் நகர துணை காவல் கண்காணிப்பாளா் சரவணன், இந்து அமைப்பு நிா்வாகிகளிடம் ரசாயனம் கலந்த சிலைகளுக்கு தடை உள்ளது என ஏற்கெனவே ஆட்சியா் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. விநாயகா் சதூா்த்திக்கு இன்னும் 4 நாள்கள் உள்ளதால் ரசாயனம் கலக்காத சிலைகளை செய்து விழாவை கொண்டாடுங்கள் எனக் கூறினாா். இதையடுத்து அவா்கள் கலைந்து சென்றனா்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G