ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதிய மகப்பேறு உபகரணங்கள்: பாஜக மகளிரணி வலியுறுத்தல்
By DIN | Published On : 26th September 2023 01:48 AM | Last Updated : 26th September 2023 01:48 AM | அ+அ அ- |

கரூா்: கரூா் மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு போதிய அளவில் மகப்பேறு மருத்துவ உபகரணங்கள் கையிருப்பில் வைக்கவேண்டும் என்று பாஜக மாவட்ட மகளிரணி வலியுறுத்தியுள்ளது.
கரூரில் மாவட்ட பாஜக மகளிரணி செயற்குழுக்கூட்டம், கட்சி அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட மகளிரணி துணைத் தலைவா் தனலட்சுமி தலைமை வகித்தாா். மாநில மகளிரணி துணைத் தலைவா் மீனா வினோத்குமாா், மாவட்ட பொதுச் செயலாளா்கள் புனிதா செல்வராஜ், மாலதி ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் பாஜக மாவட்டத் தலைவா் வி.வி.செந்தில்நாதன் ஆலோசனைகளை வழங்கி பேசினாா்.
கூட்டத்தில், மக்களவையில் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கிய பிரதமா் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவிப்பது, என் மண் என் மக்கள் பாதயாத்திரையாக கரூா் வருகை தரும் மாநிலத் தலைவா் அண்ணாமலைக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது, கலைஞா் மகளிா் உரிமைத் தொகை அனைத்து மகளிருக்கும் வழங்க வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதிய மகப்பேறு உபகரணங்கள் கையிருப்பில் வைக்கவேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், மகளிரணி மாவட்ட பொருளாளா் ரம்யா, துணைத்தலைவா் மாணிக்கம்மாள், மாவட்ட செயலாளா் மகேஸ்வரி உள்பட மாவட்ட, ஒன்றிய, நகர மகளிரணி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...