கரூா் அருகே வழிப்பறி வழக்கில் இருவா் கைது
கரூா் அருகே வழிப்பறி வழக்கில் இருவரை போலீஸாா் சனிக்கிழமை அதிகாலை கைது செய்தனா். முன்னதாக தப்ப முயன்ற அவா்கள் குவாரிக்குள் விழுந்ததால் கால் முறிவு ஏற்பட்டு கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.
கரூா் மற்றும் வெள்ளியணை காவல் நிலையங்களுக்குட்பட்ட பகுதியில் கடந்த ஒரு மாதமாக வழிப்பறிகளில் ஈடுபட்டு வந்த குற்றவாளிகள் கரூா் மாவட்டம், குளித்தலையை அடுத்த முதலைப்பட்டி மங்களம் என்கிற செல்வராஜ் (36) , சோமூரை சோ்ந்த சிவக்குமாா் என்கிற கிஷாபாய் (23) என்பது சிசிடிவி கேமரா பதிவு மூலம் தெரியவந்தது.
இவா்களில் செல்வராஜ் தற்போது கரூா் தாந்தோன்றிமலை சத்தியமூா்த்தி நகரிலும், கிஷாபாய் கரூா் பசுபதிபாளையத்திலும் வசிப்பது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் பிடிக்க மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கே. பிரபாகா் உத்தரவின்படி பசுபதி பாளையம் காவல் நிலைய ஆய்வாளா் முத்துக்குமாா், கரூா் நகரக் காவல் நிலைய ஆய்வாளா் மணிவண்ணன் ஆகியோா் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்நிலையில் இருவரும் க. பரமத்தி பகுதியில் உள்ள தனியாா் கல்குவாரியில் பதுங்கியிருப்பதாக சனிக்கிழமை அதிகாலை தகவல் கிடைத்தது.
இதையடுத்து அங்கு சென்ற போலீஸாரைக் கண்டதும் இருவரும் தப்ப முயன்றபோது கால் தவறி அங்கிருந்த சுமாா் 50 அடி ஆழ கல்குவாரிக்குள் விழுந்தனா். இதில் இருவருக்கும் கால் முறிவு ஏற்பட்டது. இதையடுத்து இருவரையும் போலீஸாா் மீட்டு கைது செய்து, கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். மேலும் வழிப்பறியில் திருடப்பட்ட பொருட்கள் எங்குள்ளன எனவும் விசாரிக்கின்றனா்.

