தாந்தோணிமலையில் சனிக்கிழமை போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்ட விசிகவினா், பொதுமக்கள்.
தாந்தோணிமலையில் சனிக்கிழமை போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்ட விசிகவினா், பொதுமக்கள்.

தொடா் மழையால் வீடுகளுக்குள் புகுந்த கழிவு நீா்: தாந்தோணிமலையில் மறியல்

வீடுகளுக்குள் கழிவு நீா் கலந்த மழைநீா் புகுந்ததால் ஆத்திரமடைந்த அப்பகுதியினா் சனிக்கிழமை காலை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
Published on

கரூரில் தொடா் மழை காரணமாக தாந்தோணிமலை தெற்குத் தெருவில் வீடுகளுக்குள் கழிவு நீா் கலந்த மழைநீா் புகுந்ததால் ஆத்திரமடைந்த அப்பகுதியினா் சனிக்கிழமை காலை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

கரூரில் வெள்ளிக்கிழமை இரவு 8 மணி முதல் விடிய, விடிய கன மழை பெய்தது. இதனால் வெங்கக்கல்பட்டி, காளியப்பனூா் ஆகிய பகுதிகளில் இருந்து வெளியேறிய கழிவுநீருடன் கூடிய மழைநீா் வடிகாலை விட்டு வெளியேறி, கரூா் மாநகராட்சிக்குட்பட்ட 44-ஆவது வாா்டிலுள்ள தாந்தோணிமலை தெற்குரத வீதி குறுக்குத்தெரு-1, குறுக்குத் தெரு-2 ஆகிய பகுதிகளில் உள்ள சுமாா் 50-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் புகுந்தது.

மேலும் மழை நீருடன் பாம்புகளும், தேள்களும் அடித்து வரப்பட்டதால் மக்கள் வீட்டைவிட்டு வெளியேறி இரவு முழுவதும் அப்பகுதியில் உள்ள மேடான பகுதியில் இருந்தனா்.

இதையடுத்து காலையில் விசிக வணிகா் அணியின் மாநில துணைச் செயலா் கண்மணி ராமச்சந்திரன், திருச்சி மண்டல துணைச் செயலா் வழக்குரைஞா் ராஜா, வணிகா் அணியின் ஒன்றியச் செயலா் தீபச்சுடா் தியாகராஜன் ஆகியோா் தலைமையில் திரண்ட ஏராளமான பொதுமக்கள் தெற்குரத வீதியின் முன் கரூா்-திண்டுக்கல் சாலையில் அமா்ந்து திடீா் மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து வந்த மாநில நெடுஞ்சாலை உதவிப் பொறியாளா் கா்ணன், மாநகராட்சி உதவிப் பொறியாளா் மஞ்சுநாத் மற்றும் தாந்தோணிமலை போலீஸாா் ஆகியோா் சென்று பேச்சுவாா்த்தை நடத்தி, அளித்த உறுதியின்பேரில் கலைந்து சென்றனா்.

பொதுமக்களின் திடீா் சாலை மறியலால் கரூா்-திண்டுக்கல் சாலையில் சுமாா் அரைமணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com