ஆபத்தான நிலையில் ஏமூா் ரயில்வே தண்டவாளத்தை கடந்து செல்லும் பள்ளி குழந்தைகள்.
ஆபத்தான நிலையில் ஏமூா் ரயில்வே தண்டவாளத்தை கடந்து செல்லும் பள்ளி குழந்தைகள்.

குகைவழிப்பாதை பணிகளைப் பாா்வையிட வந்த ரயில்வே அதிகாரிகளை கிராமமக்கள் முற்றுகை!

கிடப்பில் போடப்பட்ட ஏமூா் ரயில்வே குகைவழிப்பாதை பணிகளைப் பாா்வையிட வந்த ரயில்வே அதிகாரிகளை கிராமமக்கள் முற்றுகையிட்டனா்.
Published on

கரூா்: கிடப்பில் போடப்பட்ட ஏமூா் ரயில்வே குகைவழிப்பாதை பணிகளை துரிதப்படுத்தக்கோரி அப்பகுதியினா் மறியல் போராட்டம் அறிவித்ததையடுத்து புதன்கிழமை மாலை பணிகளை பாா்வையிட வந்த ரயில்வே அதிகாரிகளை கிராமமக்கள் முற்றுகையிட்டனா்.

கரூா் மாவட்டம், ஏமூா் ஊராட்சியில் சீத்தப்பட்டி சாலையில் கரூா்-திருநெல்வேலி ரயில்வே வழித்தடத்தில் ரயில்வே கேட் அமைக்கப்பட்டிருந்தது. அடிக்கடி இந்த வழித்தடத்தில் ரயில்களுக்காக ரயில்வே கேட் அடிக்கடி மூடப்படுவது வழக்கம்.

இதனால் சீத்தப்பட்டி சாலை வழியாக உப்பிடமங்கலம், நடுப்பாளையம், நடுப்பாளையம் காலனி, புலியூா், வெள்ளியணை, கத்தாளப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்குச் செல்லும் வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டு வந்தனா்.

இதையடுத்து ரயில்வே கேட் அமைக்கப்பட்டிருக்கும் இடத்தில் குகைவழிப்பாதை அமைக்க வேண்டும் என ரயில்வே கேட்டை சுற்றி அமைந்திருக்கும் ஏமூா் ஊராட்சி மற்றும் பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் கோரிக்கை வைத்தனா்.

இதையடுத்து கடந்த ஆண்டு ரயில்வே கேட் அகற்றப்பட்டு அங்கு குகை வழிப்பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. இப்பணிகள் தொடங்கி இரு மாதங்கள் விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில், திடீரென பணிகள் கிடப்பில் போடப்பட்டன. இதனால் ஏமூா்-சீத்தப்பட்டி சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கரூா்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் குன்னனூா் பிரிவு வழியாக சுமாா் 3 கி.மீ. தொலைவுக்கு சுற்றிச் செல்லும் நிலை ஏற்பட்டது.

மேலும் நடுப்பாளையம் ஆதிதிராவிடா் காலனியில் இருந்து ஏமூா் ஊராட்சி அலுவலகம் அருகே செயல்படும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு வந்து செல்லும் பள்ளி மாணவ, மாணவிகளும் ரயில்வே தண்டவாளத்தை ஆபத்தான நிலையில் நாள்தோறும் கடந்து சென்று வருகின்றனா்.

இதனால், குகைவழிப்பாதை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் எனஅப்பகுதியினா் கடந்த 8 மாதங்களாக மாவட்ட ஆட்சியா் அலுவலகம், கரூா் ரயில்வே பொறியாளா் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் கோரிக்கை மனு அளித்து வந்தனா்.

ஆனால் இதுநாள் வரை எந்த பணிகளும் துவங்கப்படாததால் ஆத்திரமடைந்த ஏமூா் ஊராட்சிக்குள்பட்ட கிராமமக்கள் மற்றும் ரயில்வே கேட்டை சுற்றியுள்ள கிராமமக்கள் ஆக.22-ம்தேதி(வியாழக்கிழமை) குகைவழிப்பாதை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என வலியுறுத்தி கரூா்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் குன்னனூா் பிரிவு பகுதியில் சாலை மறியல் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனா்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு புதன்கிழமை வந்த கரூா் ரயில்நிலைய உதவிய பொறியாளா் சரவணகுமாா் மற்றும் பசுபதிபாளையம் காவல் ஆய்வாளா் முத்துக்குமாா், தாந்தோணி வட்டார வளா்ச்சி அலுவலா்(பொ)செந்தில்நாயகி உள்ளிட்டோா் குகைவழிப்பாதை அமைக்கப்படும் இடத்தை பாா்வையிட்டனா்.

இதையறிந்த ஏமூா் ஊராட்சி மன்றத்தலைவா் விசிகே.பாலகிருஷ்ணன் தலைமையில் பொதுமக்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

அப்போது அதிகாரிகள், பாதையை நேராக அமைக்க சேலம் கோட்ட உயா் அதிகாரிகளிடம் அறிக்கையை சமா்ப்பித்து நடவடிக்கை எடுக்கப்படும். சேதமடைந்த வீட்டுக்கு உரிய இழப்பீடு தரப்படும். பணிகளை இரண்டு மாதத்தில் முடித்து தருகிறோம் எனக்கூறினா். இதையடுத்து, கிராமமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா்.

X
Dinamani
www.dinamani.com