பஞ்சமாதேவி ஊராட்சியில் நலத்திட்ட பணிகள் தொடக்கம்
கரூா் மின்னாம்பள்ளி பஞ்சமாதேவி ஊராட்சியில் ரூ.66 லட்சம் மதிப்பிலான புதிய நலத்திட்டப்பணிகள் புதன்கிழமை காலை துவக்கி வைக்கப்பட்டது.
கரூா் ஊராட்சி ஒன்றியம் மின்னாம்பள்ளி பஞ்சமாதேவி ஊராட்சியில் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு திட்ட நிதியில் பஞ்சமாதேவியில் ரூ.16.50 லட்சம் மதிப்பில் புதிதாக நியாயவிலைக்கடையும், 15-ஆவது நிதிக்குழு மானியம் திட்டத்தின் கீழ் சந்தனகாளிபாளையம், வசந்தம் நகா் பகுதிகளுக்கு குடிநீா் விநியோகிக்கும் வகையில் 1லட்சம் லிட்டா் கொள்ளவு கொண்ட ரூ.27 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட மேல்நிலைக்குடிநீா் தொட்டி மற்றும் புள்ளாக்கவுண்டனூரில் ரூ.22.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட சமூதாயக்கூடம் ஆகிவற்றின் திறப்பு விழா புதன்கிழமை காலை நடைபெற்றது.
விழாவுக்கு திமுக மாவட்ட துணைச் செயலாளா் மின்னாம்பள்ளி கருணாநிதி தலைமை வகித்தாா்.
ஒன்றியச் செயலாளா் முத்துக்குமாா் முன்னிலை வகித்தாா். புதிய கட்டடங்களை மின்னாம்பள்ளி பஞ்சமாதேவி ஊராட்சி மன்றத்தலைவா் சாந்தி கருணாநிதி திறந்து வைத்தாா்.
நிகழ்ச்சியில் ஊராட்சி செயலா் மற்றும் பொதுமக்கள் திரளாக பங்கேற்றனா்.

