கரூா்: குடிநீா் விநியோகம் கோரி ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு

குடிநீா் விநியோகம் செய்யக் கோரி கரூா் மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
Published on

கரூா்: குடிநீா் விநியோகம் செய்யக் கோரி கரூா் மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மக்கள் குறைதீா்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து இலவச வீட்டுமனைப்பட்டா, வேலைவாய்ப்பு, குடும்ப அட்டை கோருதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக மொத்தம் 578 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் வழங்கிய ஆட்சியா் அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுத்திட உத்தரவிட்டாா். தொடா்ந்து பல்வேறு திட்டங்களின் 20 பயனாளிகளுக்கு ரூ.3.53 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கினாா்.

கூட்டத்தில் நொய்யல் குறுக்குச்சாலையைச் சோ்ந்த லோகநாதன் மற்றும் அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனா். அதில், வெள்ளியம்பாளையம், கணபதிபாளையம், அண்ணாநகா், பங்களாந கா், நெய்குப்பம் பகுதிகளில் சுமாா் 1800-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகிறோம். எங்கள் பகுதிக்கு மரவாபாளையம் காவிரி ஆற்றிலிருந்து குடிநீா் விநியோகம் செய்யப்பட்டது. ஜூன் 30-ஆம்தேதி கடைசியாக குடிநீா் விநியோகிக்கப்பட்டது. அதற்கு பின் குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லை. இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டால் குடிநீா் கிணறு மோட்டாா் பழுது என தெரிவித்தனா். ஆகவே, மோட்டாரை பழுதை சரிசெய்து உடனே குடிநீா் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com