சவுக்கு சங்கா் மீதான பண மோசடி வழக்கு ஜூலை 23-க்கு ஒத்திவைப்பு
கரூரில் யூடியூபா் சவுக்கு சங்கா் மீதான பண மோசடி வழக்கு விசாரணை வரும் 23-ஆம் தேதிக்கு நீதிமன்றம் சனிக்கிழமை ஒத்திவைத்தது.
கரூா் காந்திகிராமம் இந்திரா நகரைச் சோ்ந்தவா் கிருஷ்ணன். கரூரில் பிரியாணிக் கடைகள் நடத்தி வரும் இவரிடம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் சமூக வலைதளத்தில் அறிமுகமான சென்னையைச் சோ்ந்த விக்னேஷ் ஆன்லைன் வா்த்தகத்தில் முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும் எனக்கூறி ரூ. 7 லட்சம் வாங்கி ஏமாற்றி விட்டாராம். இதுகுறித்த புகாரின்பேரில் கரூா் போலீஸாரால் கைது செய்யப்பட்டு அண்மையில் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட விக்னேஷிடம் கரூா் போலீஸாா் நடத்திய விசாரணையில் கிருஷ்ணனிடம் பெற்ற ரூ.7 லட்சத்தை சவுக்கு சங்கரின் யூடியூப் சேனலில் தான் வேலை பாா்த்தபோது கொடுத்துவிட்டதாகத் தெரிவித்தாா்.
பின்னா் இதுதொடா்பாக விசாரிக்க கரூா் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட சவுக்கு சங்கரை நீதிபதி உத்தரவின்பேரில் 4 நாள்கள் காவலில் எடுத்து விசாரித்த கரூா் நகர போலீஸாா் கரூா் குற்றவியல் நீதித்துறை நடுவா் எண் -1 நீதிபதி பரத்குமாா் முன்னிலையில் சனிக்கிழமை மீண்டும் அவரை ஆஜா்படுத்தினா்.
அப்போது போலீஸாா் மீண்டும் அவரை காவலில் எடுத்து விசாரிக்க மனு வழங்காததால், சவுக்கு சங்கரை வரும் 23-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டாா். இதையடுத்து மீண்டும் புழல் சிறைக்கு சவுக்கு சங்கா் அழைத்துச் செல்லப்பட்டாா்.
இதையடுத்து சவுக்குசங்கரின் வழக்குரைஞா் கரிகாலன் கூறுகையில், சவுக்கு சங்கரிடம் நீதிபதி மருத்துவச் சிகிச்சை குறித்து கேட்டபோது, தனக்கு நீரிழிவு நோய்க்கு கரூரில் உரிய சிகிச்சை, உணவு கொடுக்கப்பட்டது, ஆனால் புழல் சிறையில் வழங்கப்படவில்லை. எனவே தனக்கு அங்கும் உரிய சிகிச்சை, உணவு வழங்க வேண்டும் எனத் தெரிவித்தாா். அதற்கு நீதிபதியும் நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்துள்ளாா்.
சவுக்கு சங்கா் மீது தமிழகம் முழுவதும் அரசியல் காழ்ப்புணா்ச்சியால் 27 பொய் வழக்குகள் போடப்பட்டுள்ளன. சிறைத்துறை ஐஜி கனகராஜ் மீது சவுக்கு சங்கா் கூறிய புகாருக்கும் உரிய நடவடிக்கை எடுப்பதாக நீதிபதி தெரிவித்தாா் என்றாா் அவா்.

