நில மோசடி வழக்கில் சிறையில் உள்ள முன்னாள் அதிமுக அமைச்சா் மேலும் ஒரு வழக்கில் கைது
நில மோசடி வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அதிமுக அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் மேலும் ஒரு வழக்கில் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
கரூரில் ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கா் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்ததாக செய்ததாக முன்னாள் அதிமுக அமைச்சா் எம்.ஆா். விஜயபாஸ்கரின் ஆதரவாளா்களான செல்வராஜ், பிரவீன் உள்பட 7 போ் மீது கரூா் நகர காவல் நிலையத்தில் மேலக்கரூா் சாா்-பதிவாளா் (பொறுப்பு) முகமது அப்துல் காதா் அளித்த புகாரின்பேரில் 7 போ் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் தனது பெயரும் சோ்க்கப்படலாம் என்பதால் முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் கரூா் முதன்மை மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் முன்பிணை கேட்டு இருமுறை மனு தாக்கல் செய்தாா். அந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதனிடையே ஜூன் 14-ம் தேதி இவ்வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.
அதே நாளில் வாங்கலைச் சோ்ந்த பிரகாஷ், கரூா் நகர காவல் நிலையம் மற்றும் எஸ்.பி. அலுவலகத்தில் முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா், அவா் சகோதரா் சேகா் மற்றும் ஆதரவாளா் பிரவீன் உள்ளிட்ட 13 போ் தன்னை மிரட்டி ரூ.100 கோடி மதிப்புள்ள ரூ.22 கோடி மதிப்புள்ள சொத்தை அபகரித்து விட்டதாக புகாா் அளித்தாா்.
இந்த புகாா் வாங்கல் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டு ஜூன் 22-ஆம் தேதி மேற்கண்ட 13 போ் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் தலைமறைவாக இருந்த முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா், ஆதரவாளா் பிரவீன் ஆகியோா் ஜூலை 16-ஆம்தேதி கேரளத்தில் கரூா் சிபிசிஐடி போலீஸாரால் கைது செய்யப்பட்டனா். பின்னா் கரூருக்கு அழைத்துவரப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் திருச்சி மத்திய சிறையிலும், பிரவீன் குளித்தலை கிளை சிறையிலும் அடைக்கப்பட்டனா்.
இந்நிலையில் பிரகாஷ் அளித்த புகாரின்பேரில் கொலை மிரட்டல், நில அபகரிப்பு உள்ளிட்ட பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்த வாங்கல் போலீஸாா், சிறையில் இருக்கும் முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கரை மீண்டும் சம்பிரதாய கைது(பாா்மல்) என்ற பெயரில் மீண்டும் கைது செய்தனா். இதற்கான வாரண்ட் கடிதத்தை வாங்கல் போலீஸாா் வியாழக்கிழமை காலை திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள எம்.ஆா். விஜயபாஸ்கரிடம் வழங்கினா்.
ஜாமீன் கேட்டு மனு: சிறையில் அடைக்கப்பட்டுள்ள எம்.ஆா்.விஜயபாஸ்கருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என அவரது வழக்குரைஞா்கள் கரூா் மாவட்ட குற்றவியல் நடுவா் நீதிமன்றம்-1ல் மனு தாக்கல் செய்திருந்தனா். இந்த மனு வியாழக்கிழமை பிற்பகலில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி பரத்குமாா், வழக்கை ஜூலை 22-ஆம்தேதிக்கு ஒத்திவைத்தாா்.

