ரூ. 100 கோடி நில மோசடி வழக்கில் முன்னாள் அதிமுக அமைச்சருக்கு உதவிய காவல் ஆய்வாளா் நீதிமன்றத்தில் ஆஜா்

முன்னாள் அதிமுக அமைச்சருக்கு உதவிய காவல் ஆய்வாளா் நீதிமன்றத்தில் ஆஜா்.
Published on

ரூ. 100 கோடி நிலமோசடி வழக்கில் முன்னாள் அமைச்சா் எம்.ஆா். விஜயபாஸ்கருக்கு உதவியதாகக் கைதான வில்லிவாக்கம் காவல் ஆய்வாளா் பிருத்விராஜ் சிபிசிஐடி போலீஸாரின் விசாரணைக்கு பின் சனிக்கிழமை மாலை கரூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டாா்.

ரூ.100 கோடி நில மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சா் எம்.ஆா். விஜயபாஸ்கரை சிபிசிஐடி போலீஸாா் கைது செய்தனா். மேலும் இந்த வழக்கில் போலி ஆவணம் தயாரிக்க எம்.ஆா். விஜயபாஸ்கருக்கு உதவியதாக கடந்த 2017-ல் கரூா் நகர காவல் நிலைய ஆய்வாளராக இருந்து, தற்போது சென்னை வில்லிவாக்கம் காவல் ஆய்வாளராக உள்ள பிருத்விராஜை கரூா் சிபிசிஐடி போலீஸாா் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனா்.

இந்நிலையில் இவரை கடந்த 25-ஆம் தேதி நீதிமன்றக் காவலில் எடுத்து விசாரித்த சிபிசிஐடி போலீஸாா் கரூா் குற்றவியல் நடுவா் நீதிமன்றம் எண். 2-இல் நீதிபதி (பொ) மகேஷ் முன்னிலையில் சனிக்கிழமை ஆஜா்படுத்தினா். வழக்கை விசாரித்த நீதிபதி அவரை சேலம் மத்திய சிறையில் மீண்டும் அடைக்க உத்தரவிட்டாா். இதையடுத்து பலத்த பாதுகாப்புடன் காவல் ஆய்வாளா் பிருத்விராஜ் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

X
Dinamani
www.dinamani.com