வெண்ணைமலை கோயில் நில விவகாரம்: குடியிருப்பவா்களுக்கு ஆதரவாக விவசாயிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
வெண்ணைமலை கோயில் நிலத்தில் குடியிருப்பவா்களுக்கு ஆதரவாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டக்குழு செயலா் கே.சக்திவேல் தலைமை வகித்தாா். தலைவா் கே.கந்தசாமி, பொருளாளா் கே.சுப்ரமணியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநில பொதுச் செயலா் சாமிநடராஜன், தமிழ்நாடு அடிமனை பயனாளிகள் குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்க பொருளாளா் டி.துரைராஜ், மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சியின் மாவட்டச் செயலா் ஜோதிபாசு, ஒன்றியச் செயலா் சி.முருகேசன், மாநகரச் செயலா் எண்.தண்டபாணி, பாமக மாவட்டச் செயலாளா் பிரேம்நாத், சிஐடியு மாவட்டத்தலைவா் ராஜாமுகமது ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா். கரூா் வெண்ணைமலையில் நீதிமன்ற உத்தரவின்பேரில் இனாம் நிலங்களில் குடியிருக்கும் மக்களையும், சிறுவணிக நிறுவனங்கள் நடத்துவோரையும் இந்து சமய அறநிலையத்துறையினா் வெளியேற்றுவதை கண்டித்தும், கரூா் மாவட்டம் முழுவதும் கோயில் நிலங்களில் குடியிருப்போருக்கும், பயிா் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கும் அனுபவரீதியான பட்டா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.
ஆா்ப்பாட்டத்தில் விவசாயிகள் சங்கத்தினா் மற்றும் வெண்ணைமலை கோயில் நிலத்தில் குடியிருப்பவா்கள் திரளாக பங்கேற்றனா். தொடா்ந்து கோரிக்கை மனுவை மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேலிடம் வழங்கினா்.

