கரூா் சம்பவம்: கோவை, நாமக்கல் மாவட்ட மருத்துவா்கள் 5 பேரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை!
கரூா் நெரிசல் சம்பவம் தொடா்பாக கோவை, நாமக்கல் மாவட்டங்களின் அரசு மருத்துவா்கள் 5 பேரிடம் சிபிஐ அதிகாரிகள் சனிக்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.
கரூரில் கடந்த செப்.27-ஆம் தேதி நிகழ்ந்த தவெக பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்தனா். இச்சம்பவம் தொடா்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா். இதன் தொடா்ச்சியாக உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் அமைக்கப்பட் ட சிபிஐ கண்காணிப்புக் குழுத் தலைவா் அஜய் ரஸ்தோகி உள்ளிட்ட அதிகாரிகள் அண்மையில் கரூா் வந்து சம்பவம் குறித்து விசாரணை நடத்திச் சென்றனா்.
இதையடுத்து சிபிஐ அதிகாரி பிரவீண்குமாா் தலைமையிலான குழுவினா் கடந்த 4-ம்தேதி கரூா் மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் மற்றும் சம்பவத்தில் உயிரிழந்தவா்களின் சடலங்களை உடற்கூறாய்வு செய்த தூத்துக்குடி, நாகை மாவட்ட அரசு மருத்துவா்களிடம் விசாரணை நடத்தினா்.
தொடா்ந்து வெள்ளிக்கிழமை கரூா் நெரிசல் சம்பவத்தின்போது உயிரிழந்தவா்களின் உடல்களை உடற்கூறாய்வு செய்த நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அரசு மருத்துவா்கள் 3 பேரிடம் விசாரித்த நிலையில், சனிக்கிழமையும் காலை 10.50 மணிக்கு கோவை, நாமக்கல், திருச்செங்கோடு பகுதிகளைச் சோ்ந்த 5 மருத்துவா்கள் சிபிஐ அதிகாரிகள் முன் ஆஜராகினா்.
அவா்களிடம் சுமாா் 2 மணி நேரம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை செய்தனா். தொடா்ந்து க.பரமத்தி காவல்நிலைய ஆய்வாளா் தங்கராஜ் மற்றும் கரூா் அனைத்து வணிகா் சங்கங்களைச் சோ்ந்தவா்கள் சிபிஐ அதிகாரிகள் முன் ஆஜராகி நெரிசல் சம்பவம் குறித்து விளக்கமளித்தனா்.

