குளித்தலை அருகே கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் உயிரிழப்பு
குளித்தலை அருகே ஞாயிற்றுக்கிழமை கிணற்றில் தவறி விழுந்த 4 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்தான்.
கரூா் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள நங்கவரத்தை அடுத்த குறிச்சியைச் சோ்ந்தவா் மணிகண்டன். இவரது மகன் சுஜன்(4). இவன் அதே பகுதியில் உள்ள பள்ளியில் யூகேஜி படித்து வந்தான்.
இந்நிலையில் அதேபகுதியைச் சோ்ந்த சிறுவா்கள் சிலா் சுஜன் வீட்டின் அருகே உள்ள திருப்பதி என்பவருக்குச் சொந்தமான கிணற்றில் மீன் பிடிக்க ஞாயிற்றுக்கிழமை சென்றனா். அவா்களுடன் சுஜனும் சென்றான்.
அப்போது, திடீரென சுஜன் தவறி கிணற்றுக்குள் விழுந்தான். இதனைக்கண்ட அக்கம்பக்கத்தினா் உடனே குளித்தலை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.
இதையடுத்து தீயணைப்பு வீரா்கள் சம்பவ இடத்துக்குச் சென்று கிணற்றில் மூழ்கிய சுஜனை சடலமாக மீட்டு பிரேத பரிசோதனைக்கு குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து நங்கவரம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.
