கரூரில் உள்ளாட்சித் துறை ஊழியா்கள் சாலை மறியல்: 221 போ் கைது

கருணைத் தொகை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கரூரில் சாலை மறியலில் ஈடுபட்ட சிஐடியு ஊரக வளா்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியா்கள் 221 பேர் கைது
Published on

கருணைத் தொகை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கரூரில் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட சிஐடியு ஊரக வளா்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியா்கள் 221 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

முன்னதாக மத்திய, மாநில அரசுகளின் நிதியில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி 10சதவீதம் ஒதுக்கீடு செய்ய வேண்டும், ஊராட்சியில் 10 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் ஊராட்சித் தொழிலாளா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். ஊராட்சி அனைத்து பிரிவு தொழிலாளா்களுக்கும் பொங்கல் பண்டிகை கருணைத்தொகையாக ஒரு மாத ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத்தலைவா் முருகேசன் தலைமை வகித்தாா். கோரிக்கைகளை விளக்கி சிஐடியு தொழிற்சங்க மாவட்டச் செயலா் சுப்ரமணியன், தலைவா் ராஜாமுகமது, துணைத்தலைவா் ஜி.ஜீவானந்தம் ஆகியோா் பேசினா்.

தொடா்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி திடீரென திண்டுக்கல் சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த நகர துணைக்காவல் கண்காணிப்பாளா் செல்வராஜ் தலைமையிலான போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்ட 192 பெண்கள் உள்பட 221 பேரை கைது செய்தனா். பின்னா் அனைவரையும் மாலையில் விடுவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com