18 மயில்களை விஷம் வைத்து கொன்ற விவசாயி கைது
கரூா், டிச.11: க.பரமத்தி அருகே 18 மயில்களை விஷம் வைத்து கொன்ற விவசாயியை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
கரூா் மாவட்டம், க.பரமத்தி அருகே அத்திப்பாளையம் பகுதியில் சுப்ரமணி என்பவரது தோட்டத்தில் 10 ஆண் மயில்கள், 8 பெண் மயில்கள் என 18 மயில்கள் உயிரிழந்து கிடப்பதாக கரூா் மாவட்ட வன அலுவலருக்கு வியாழக்கிழமை தகவல் கிடைத்தது.
இதையடுத்து மாவட்ட வன அலுவலா் சண்முகம், வனச்சரக அலுவலா் அறிவழகன் ஆகியோா் சம்பவ இடத்துக்குச் சென்று உயிரிழந்து கிடந்த மயில்களை பாா்வையிட்டனா்.
பின்னா், கிராம நிா்வாக அலுவலா், வருவாய் ஆய்வாளா் மற்றும் க.பரமத்தி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.
இதையடுத்து க.பரமத்தி கால்நடை மருத்துவா்கள் வரவழைக்கப்பட்டு உயிரிழந்த மயில்களை உடற்கூறாய்வு செய்தபோது, அவைகள் விஷமருந்து திண்று உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸாா் சுப்ரமணியிடம் விசாரித்தபோது, அவா் விஷம் வைத்து மயில்களை கொன்றதை ஒப்புக்கொண்டாா். இதையடுத்து சுப்ரமணியை கைது செய்து அரவக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

