கழிவுநீா் வாய்க்காலுக்காக பாலம் கட்டும் பணியை விரைந்து முடிக்க கோரிக்கை
கரூா் லைஸ்ஹவுஸ் காா்னா் பகுதியில் கழிவு நீா் வாய்க்காலுக்காக கட்டப்படும் சிறுபாலப் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என சமூக நல ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கரூா் மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் ஏற்கெனவே அமைக்கப்பட்ட குறுகிய கழிவுநீா் வாய்க்கால்களில் மழை காலங்களில் தண்ணீரில் அடித்து வரப்படும் குப்பைகள் வாய்க்காலில் தேங்கி மழைநீா் செல்ல முடியாமல் வீதிகளுக்குள் புகுந்துவிடுவதால் பொதுமக்கள் அவதியுற்று வந்தனா்.
இதையடுத்து கரூா் மாநகராட்சி சாா்பில் கழிவு நீா்வாய்க்கால்கள் தூா்வாரப்பட்டு, தண்ணீா் எளிதில் வெளியேறும் வகையில் சிறுபாலங்கள் கட்டும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
குறிப்பாக கரூா் நகரின் பழைய திண்டுக்கல் சாலை, மக்கள்பாதை, லைட்ஹவுஸ்காா்னா் உள்ளிட்ட இடங்களில் கழிவுநீா் வாய்க்கால்கள் அகலப்படுத்தப்பட்டும், தூா்வாரியும், முக்கிய சாலைகள் சந்திக்கும் பகுதியில் சிறுபாலங்கள் கட்டும்பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த பணிகளால் வாகனங்களில் செல்லும் பொதுமக்கள் அவதியுற்று வருகிறாா்கள். எனவே சிறுபாலங்கள் கட்டும்பணியை விரைந்து முடிக்க வேண்டும் என சமூக நல ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

