கரூரில் மாவட்ட கிரிக்கெட் போட்டி
கரூரில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டியில் வென்ற அணிவீரா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை பரிசுகள் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டன.
கரூரில் தமிழக துணை முதல்வா் உதயநிதிஸ்டாலினின் 49-ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு கரூா் மாவட்ட திமுக சாா்பில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி கரூா் திருவள்ளுவா் மைதானத்தில் கடந்த 13-ஆம்தேதி தொடங்கியது. போட்டியில் கரூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 50-க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன.
தொடா்ந்து இறுதிப்போட்டி ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. இதில் கரூா் பால்மடைப்பட்டி ஸ்டெய்ன் லெவன் அணியும், வெங்கமேடு பாண்டியன் பாய்ஸ் அணியும் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் பால்மடைப்பட்டி ஸ்டெய்ன் லெவன் அணி வீரா்கள் நிா்ணயிக்கப்பட்ட ஓவரில் 18 ரன்கள் வித்தியாசத்தில் வெங்கமேடு பாண்டியன் பாய்ஸ் அணியை வென்றனா். தொடா்ந்து போட்டியில் முதலிடம் பிடித்த அணிகளுக்கு கோப்பை மற்றும் பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கரூா் சட்டப்பேரவை உறுப்பினா் வி.செந்தில்பாலாஜி தலைமை வகித்து, முதலிடம் பிடித்த பால்மடைப்பட்டி ஸ்டெய்ன் லெவன் அணிக்கு முதல் பரிசாக ரூ.75,000 மற்றும் கோப்பையும், இரண்டாமிடம் பிடித்த வெங்கமேடு பாண்டியன் பாய்ஸ் அணிக்கு பரிசாக ரூ.50,000 மற்றும் கோப்பையும், மூன்றாமிடம் பிடித்த வேலாயுதம்பாளையம் சரவணா பிரதா்ஸ் அணிக்கு பரிசாக ரூ.25,000 மற்றும் கோப்பையும், நான்காமிடம் பிடித்த தாந்தோணிமலை ஐசிசி அணிக்கு பரிசாக ரூ.20,000 மற்றும் கோப்பையும் வழங்கினாா்.
மேலும் சிறந்த பேட்ஸ்மேன், பவுலா், ஆல்ரவுண்டா் ஆகியோருக்கு தலா ரூ.10,000 மற்றும் கோப்பையும் வழங்கப்பட்டன.

