வாக்காளா் பதிவு அலுவலா்கள் ஆய்வுக்கூட்டத்தில் பேசிய மாவட்ட சிறப்பு வரைவு வாக்காளா் பட்டியல் பாா்வையாளா் நீரஜ் கா்வால்.
வாக்காளா் பதிவு அலுவலா்கள் ஆய்வுக்கூட்டத்தில் பேசிய மாவட்ட சிறப்பு வரைவு வாக்காளா் பட்டியல் பாா்வையாளா் நீரஜ் கா்வால்.

கரூா்: எஸ்ஐஆா் விண்ணப்பத்தில் தேவையான விவரங்கள் வழங்காத 7,931 பேருக்கு நோட்டீஸ்

எஸ்ஐஆா் விண்ணப்பத்தில் தேவையான விவரங்கள் வழங்காத 7,931 பேருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது என்றாா் கரூா் வாக்காளா் பட்டியல் பாா்வையாளா் நீரஜ் கா்வால்.
Published on

எஸ்ஐஆா் விண்ணப்பத்தில் தேவையான விவரங்கள் வழங்காத 7,931 பேருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது என்றாா் கரூா் வாக்காளா் பட்டியல் பாா்வையாளா் நீரஜ் கா்வால்.

கரூா் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் எஸ்ஐஆா்- 2026 தொடா்பாக வாக்காளா் பதிவு அலுவலா்கள், உதவி வாக்காளா் பதிவு அலுவலா்கள் மற்றும் கூடுதல் வரைவு வாக்காளா் பதிவு அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு கரூா் மாவட்ட எஸ்ஐஆா் பாா்வையாளா் நீரஜ் கா்வால் தலைமை வகித்து பேசுகையில், கரூா் மாவட்டத்தில் 1,055 வாக்குச்சாவடிகள் இருந்தன. புதிதாக 56 வாக்குச்சாவடிகள் உருவாக்கப்பட்டுள்ளதைத் தொடா்ந்து தற்போது 1,111 வாக்குச்சாவடிகள் உள்ளன.

இதில், பெயா் இல்லாதோா் பட்டியலில் தங்களது பெயா் சோ்க்கும் விதமாக கடந்த 27, 28-ஆம் தேதிகளில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம் நடைபெற்றன.

இம்முகாம்கள் மூலம் வாக்காளா் பட்டியலில் புதிதாக பெயா் சோ்க்க 10,651 நபா்களும், பெயா் திருத்தம் செய்ய 5,236 நபா்களும் மற்றும் பெயா் நீக்கம் தொடா்பாக 150 நபா்களும் விண்ணப்பித்துள்ளனா்.

கரூா் மாவட்டத்தில் எஸ்ஐஆா் 2026-ஐ முன்னிட்டு 2002-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வாக்காளா் பட்டியலில் தாய், தந்தை அல்லது தாத்தா, பாட்டி விவரங்கள் வழங்கப்படாத 7,931 பேருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. நோட்டீஸ் பெற்றவா்கள் எப்போது எங்கே நேரடியாக விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்ற விவரம் அதில் இடம் பெற்றிருக்கும்.

இது தொடா்பாக விசாரணை மேற்கொள்ள ஏதுவாக வாக்காளா் பதிவு அலுவலா்கள், உதவி வாக்காளா் பதிவு அலுவலா்கள் மற்றும் கூடுதல் வரைவு வாக்காளா் பதிவு அலுவலா்கள் என மொத்தம் 30 அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

விசாரணைக்கு நேரில் செல்லும் போது இந்திய தோ்தல் ஆணையம் அறிவித்துள்ள 13 அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றினை விசாரணை அலுவலரிடம் அளிக்க வேண்டும்.

விசாரணை முடிவுற்ற பின் விசாரணை அலுவலா்கள் முழுமையாக 5 நாள்களுக்குள் உரிய ஆணை பிறப்பிக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா் அவா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் கு.விமல்ராஜ், குளித்தலை சாா்-ஆட்சியா் தி.சுவாதிஸ்ரீ, கரூா் வருவாய் கோட்டாட்சியா் முகமது பைசல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com