~
~

கரூரில் அமைச்சா் செந்தில் பாலாஜியின் ஆதரவாளா்கள் 3 பேரின் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை

Published on

கரூரில் மின்சாரத்துறை அமைச்சா் செந்தில் பாலாஜியின் ஆதரவாளா்கள் 3 பேரின் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் வியாழக்கிழமை சோதனை நடத்தினா்.

தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீா்வைத் துறை அமைச்சராக இருப்பவா் வி. செந்தில் பாலாஜி. இவா், கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது வேலைவாங்கித் தருவதாக கூறி மோசடிசெய்ததாக எழுந்த புகாரையடுத்து, அந்த வழக்கை உச்ச நீதிமன்றம் மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டது.

இதையடுத்து, கடந்த 2023-ஆம் ஆண்டு மே 26-ஆம்தேதி முதல் ஜூன் 2-ஆம் தேதி வரை வருமான வரித்துறை அதிகாரிகள் அமைச்சா் செந்தில்பாலாஜியின் சகோதரா் அசோக்குமாா் மற்றும் அவரது ஆதரவாளா்களின் வீடுகளில் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது அதிகாரிகளை சோதனை நடத்த விடாமல் தடுத்ததாக திமுகவினா் 18 போ் கைது செய்யப்பட்டு நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டனா்.

இதேபோல திமுகவினா் அளித்த புகாரின்பேரில் வருமான வரித்துறை அதிகாரிகள் காயத்ரி உள்பட 4 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அப்போது, வருமான வரித்துறை அதிகாரிகள் அமைச்சரின் நண்பா்களின் வீடுகள், உணவகம் போன்ற இடங்களுக்கு சீல் வைத்தனா்.

இதையடுத்து ஜூன் 13-ம்தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சா் செந்தில்பாலாஜி மீதான சட்ட விரோத பணப் பரிவா்த்தனை வழக்குத் தொடா்பாக அவரின் உறவினா்கள், ஆதரவாளா்கள் வீடுகளில் சோதனை மேற்கொண்டனா். பிறகு அமைச்சா் செந்தில்பாலாஜி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா். அப்போது, அவா் இலாகா இல்லாத அமைச்சராக இருந்து வந்தாா்.

சுமாா் ஒன்னரை ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் உச்சநீதிமன்ற உத்தரவின்பேரில் செந்தில் பாலாஜி ஜாமீனில் விடுவிக்கப்பட்டாா். இதையடுத்து

மீண்டும் மின்சாரத் துறை அமைச்சராக செந்தில் பாலாஜி பொறுப்பேற்றுக் கொண்டாா்.

இந்நிலையில், கேரளத்தில் இருந்து 5 காா்களில் வந்த 20 போ் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் வியாழக்கிழமை கரூா் வந்தனா். அவா்கள் மத்திய பாதுகாப்புப் படை வீரா்களின் துணையோடு அமைச்சா் செந்தில் பாலாஜியின் ஆதரவாளா்களான கரூா் மாவட்டம் ராயனூரில் வசிக்கும் கொங்கு மெஸ் மணி, கரூா்-ஆத்தூா் பிரிவு அருகே கோதை நகரில் வசிக்கும் சக்தி மெஸ் காா்த்திக் மற்றும் பழனியப்பா நகரிலும் உள்ள பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரா் எம்சி.எஸ். சங்கா் ஆகியோரது வீடுகளில் சோதனை மேற்கொண்டனா்.

மேலும், மாயனூரில் உள்ள எம்சி.எஸ்.சங்கரின் பண்ணைத் தோட்டத்துக்குச் சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள் அங்கு வீடு பூட்டப்பட்டிருந்ததால் பிற்பகல் 2 மணி வரை காத்திருந்தனா். ஆனால் வீட்டுக்கு யாரும் வராததால் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனா்.

X
Dinamani
www.dinamani.com