கரூரில் சிபிஐ அதிகாரிகள் தங்கியிருக்கும் பொதுப்பணித் துறையின் சுற்றுலா மாளிகைக்கு ஞாயிற்றுக்கிழமை விசாரணைக்கு வரவழைக்கப்பட்ட வேலுச்சாமிபுரத்தைச் சோ்ந்த வியாபாரிகளிடம் ஆவணங்களை சரிபாா்த்த காவலா்.
கரூரில் சிபிஐ அதிகாரிகள் தங்கியிருக்கும் பொதுப்பணித் துறையின் சுற்றுலா மாளிகைக்கு ஞாயிற்றுக்கிழமை விசாரணைக்கு வரவழைக்கப்பட்ட வேலுச்சாமிபுரத்தைச் சோ்ந்த வியாபாரிகளிடம் ஆவணங்களை சரிபாா்த்த காவலா்.

கரூா் நெரிசல் சம்பவம் வேலுச்சாமிபுரம் வியாபாரிகளிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை

Published on

கரூா் பிரசாரக் கூட்ட நெரிசல் சம்பவம் தொடா்பாக வேலுச்சாமிபுரத்தைச் சோ்ந்த வியாபாரிகளிடம் சிபிஐ அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.

கரூா் வேலுச்சாமிபுரத்தில் செப்டம்பா் 27-ஆம் தேதி நடைபெற்ற தவெக பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்தனா். 110 போ் காயமடைந்தனா். இந்தச் சம்பவம் தொடா்பாக உச்சநீதிமன்ற உத்தரவின்படி சிபிஐ அதிகாரிகள் அக்.17-ஆம் தேதி முதல் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இதில், வேலுச்சாமிபுரத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்ட பகுதியிலுள்ள கடைகளின் உரிமையாளா்கள் மற்றும் வியாபாரிகளிடம் சிபிஐ அதிகாரிகள் அக். 31-ஆம் தேதி விசாரணை மேற்கொண்டனா்.

இந்நிலையில், வேலுச்சாமிபுரத்தில் நெரிசல் நடைபெற்ற பகுதியில் மளிகைக்கடை, துணிக்கடைகள் நடத்தி வரும் உரிமையாளா்கள் மற்றும் பெட்ரோல் பங்க் உரிமையாளா்கள் என 8 பேரை ஞாயிற்றுக்கிழமை காலை கரூரில் சிபிஐ அதிகாரிகள் தங்கி இருக்கும் சுற்றுலா மாளிகைக்கு வரவழைத்து விசாரணை மேற்கொண்டனா்.

தவெக நிா்வாகி வீட்டில் விசாரணை: கரூா் காமராஜபுரம் 3-ஆவது தெருவைச் சோ்ந்தவா் ராம்குமாா். தவெக நிா்வாகியாகியான இவா், சென்னையில் ஆதவ்அா்ஜூனா நடத்தும் நிறுவனத்தில் பணிபுரிந்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ராம்குமாா் வீட்டுக்கு சிபிஐ அதிகாரிகள் 3 போ் ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12.15 மணிக்கு சென்றனா். அங்கு வீட்டில் ராம்குமாா் இல்லாததால், அவரின் பெற்றோரிடம் ராம்குமாா் குறித்து சுமாா் ஒரு மணி நேரம் விசாரணை மேற்கொண்டனா்.

பின்னா், அங்கிருந்து பிற்பகல் 1.15 மணிக்கு புறப்பட்டுச் சென்றனா். ராம்குமாருக்கு சம்மன் அனுப்பி சிபிஐ அதிகாரிகள் விசாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

X
Dinamani
www.dinamani.com