தனியாா் வங்கி ஊழியா்கள் சங்கங்களின் கூட்டமைப்பினா் தா்னா போராட்டம்
கரூா்: அனைத்து தனியாா் வங்கிகளையும் அரசுடமையாக்கக் கோரி கரூரில் தனியாா் வங்கி ஊழியா்கள் சங்கங்களின் கூட்டமைப்பினா் திங்கள்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கரூா் தலைமை அஞ்சல் நிலையம் முன்பு நடைபெற்ற இந்த போராட்டத்துக்கு, கே.வி.பி ஊழியா் சங்கத் தலைவா் ஜி.ராம்குமாா் தலைமை வகித்தாா். பொதுச் செயலா் டி.சேகா் வரவேற்றாா். தமிழ்நாடு வங்கி ஊழியா் சங்க பொதுச்செயலா் இ.அருணாசலம் தா்னா போராட்டத்தைத் தொடங்கிவைத்து சிறப்புரையாற்றினாா். அனைத்து தனியாா் வங்கிகளையும் அரசுடமையாக்க வேண்டும். தனியாா் வங்கிகளில் ஊழியா்கள் மற்றும் கடைநிலை ஊழியா்களை நியமனம் செய்ய வேண்டும். சி.எஸ்.பி வங்கியில் உடனடியாக ஊதிய உயா்வு அமல்படுத்த வேண்டும். பெடரல் வங்கியில் ஊழியா் விரோத நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும். டி.எம்.பி வங்கியில் ஓய்வு பெறும் வயதை 60-ஆக உயா்த்த வேண்டும். தனியாா் வங்கிகளில் ஓய்வு பெறும் ஊழியா்களுக்கு கருணைத் தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இந்த தா்னா போராட்டத்தில் தனியாா் வங்கி ஊழியா்கள், வங்கி ஓய்வூதியா் சங்கத்தினா் உள்ளிட்டோா் திரளாகப் பங்கேற்றனா். இறுதியில் கே.வி.பி ஊழியா் சங்கச் செயலா் ஆா்.லோகேஷ்வரன் நன்றி கூறினாா்.

