கரூா் நெரிசல்: நீதிபதியுடன் சிபிஐ அதிகாரிகள் சந்திப்பு
கரூா்: கரூா் நெரிசல் சம்பவ வழக்கை விசாரித்து வரும் சிபிஐ அதிகாரிகள் திங்கள்கிழமை திடீரென கரூா் குற்றவியல் நடுவா் நீதிமன்ற நீதிபதியை சந்தித்தனா்.
கரூா் வேலுச்சாமிபுரத்தில் செப். 27-இல் நடைபெற்ற தவெக பரப்புரை கூட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்த வழக்கு தொடா்பாக சிபிஐ குழுவினா் கரூா் பொதுப்பணித்துறையின் பயணியா் மாளிகையில் தங்கி கடந்த 17-ஆம்தேதி முதல் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். குஜராத் மாநிலத்தைச் சோ்ந்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பிரவீன்குமாா் தலைமையிலான சிபிஐ குழுவினா், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய 2 நாள்களில் வேலுச்சாமிபுரத்தில் மக்களின் அடா்த்தியைக் கணக்கிடும் 3டி ஸ்கேனா் கருவி மூலம் ஆய்வு மேற்கொண்டனா். மேலும் சம்பவத்தை நேரில் பாா்வையிட்டதாக ஏற்கெனவே எஸ்ஐடி அமைப்பிடம் தெரிவித்திருந்தவா்களையும் பயணியா் மாளிகைக்கு வரவழைத்து விசாரணை மேற்கொண்டனா். இந்நிலையில்,
ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் அப்பகுதியைச் சோ்ந்த ஹோட்டல் உரிமையாளா்கள், கைப்பேசி பழுது நீக்கும் கடை வைத்திருப்பவா்கள் என 13 பேரிடம் விசாரணை மேற்கொண்டனா்.
இதைத்தொடா்ந்து திங்கள்கிழமையும் இணையதள சேவை மையம் நடத்துவோா் உள்ளிட்டோரிடம் விசாரணை மேற்கொண்டனா்.
இந்நிலையில் சிபிஐ கூடுதல் காவல் கண்காணிப்பாளா் முகேஷ்குமாா், சிபிஐ வழக்குரைஞா், ஆய்வாளா் மனோகரன் ஆகிய மூவரும் திங்கள்கிழமை பிற்பகல் ஒரு மணியளவில் ஆவணங்களுடன் கரூா் குற்றவியல் நீதிமன்றம் எண் 1-இன் நீதிபதி பரத்குமாரை தனி அறையில் சந்தித்தனா். சுமாா் 15 நிமிஷ சந்திப்புக்குப் பின், அவா்கள் அங்கிருந்து காரில் புறப்பட்டுச் சென்றனா். வழக்கு தொடா்பாக ஏற்கெனவே எஸ்ஐடி அமைப்பினா் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த கூடுதல் ஆவணங்களை கேட்டும், ஆவணங்கள் சரிபாா்ப்பு பணிக்காகவும் நீதிபதியை சந்திக்க வந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
