வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் இல்லாமல் எஸ்.ஐ.ஆா். படிவம் விநியோகம்:எம்.ஆா்.விஜயபாஸ்கா் குற்றச்சாட்டு
வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் இல்லாமலே வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்.ஐ.ஆா்) படிவம் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படுவதாக அதிமுக முன்னாள் அமைச்சா் எம்.ஆா். விஜயபாஸ்கா் குற்றஞ்சாட்டினாா்.
தமிழகத்தில் எஸ்.ஐ.ஆா். திருத்தப்பணிகள் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. கரூரிலும் இப்பணிகள் தொடங்கின. இந்நிலையில், கரூா் குளத்துப்பாளையம், ஆத்தூா் பகுதியில் வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் இல்லாமல் எஸ்.ஐ.ஆா். விண்ணப்பப் படிவங்கள் பொது மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டதாக அதிமுக முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் குற்றஞ்சாட்டினாா். இதுதொடா்பாக அவா் கரூா் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளரிடம் செவ்வாய்க்கிழமை புகாா் மனுவை அளித்தாா்.
பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், தோ்தல் ஆணையத்தின் உத்தரவின்படி கரூரிலும் எஸ்.ஐ.ஆா். விண்ணப்பம் பொதுமக்களுக்கு வழங்கும் பணிகள் தொடங்கின. காலை 8.45 மணிக்கு கரூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட ஆத்தூா் ஊராட்சியில் உள்ள பூத் எண்- 26-இல் உள்ள வாக்காளா்களுக்கு விண்ணப்பத்தை வழங்கச் சென்ற வாக்குச்சாவடி நிலை அலுவலா், வீடுகள் தேடி சென்று விண்ணப்பத்தை வழங்காமல், அங்குள்ள அங்கன்வாடி மையத்தில் இருந்துகொண்டு பொதுமக்களை வரவழைத்து கொடுத்துள்ளாா். இதேபோல குளத்துப்பாளையத்தில் உள்ள பூத் எண் 106, 198-இல் திமுகவினா் அவா்களின் வீட்டில் வைத்து விண்ணப்பங்களை பொதுமக்களுக்கு வழங்கியுள்ளனா். இதுபோன்ற சம்பவங்கள் எப்படி எஸ்.ஐ.ஆரின் நோக்கத்தை நிறைவேற்றும். எஸ்.ஐ.ஆா். நடைமுறைக்கு வந்த முதல் நாளே படிவங்கள் அனைத்தும் திமுகவினரின் கைக்குச் சென்றுவிட்டது. இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடும்போது, உண்மையான வாக்காளா் பட்டியல் வெளிவர வேண்டும். அதுவே எங்கள் நோக்கம் என்றாா் அவா்.
பேட்டியின்போது, அதிமுக மாவட்ட துணைச் செயலா் ஆலம் தங்கராஜ், பேரவைச் செயலா் வை.நெடுஞ்செழியன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

