சமூக சீரழிவே கோவை சம்பவத்துக்கு காரணம்: ஈ.ஆா். ஈஸ்வரன்
சமூக சீரழிவே கோவை சம்பவத்துக்கு காரணம் என்றாா் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலா் ஈ.ஆா்.ஈஸ்வரன்.
இதுதொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:
கோவையில் ஒரு பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறோம். இந்த சம்பவத்தில உடனடி நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை அடையாளம் கண்டு கைது செய்திருக்கின்ற காவல்துறையை பாராட்டுகிறோம். குற்றம் நடந்தவுடன் துரிதமாக செயல்பட்ட காவல்துறை பாராட்டப்பட்டாலும், குற்றத்துக்கான காரணத்தை அரசு அலசி ஆராய வேண்டும். இரவு 11 மணிக்கு விமான நிலையத்தின் பின்புறம் ஒரு ஆணும் பெண்ணும் ஏன் இருந்தாா்கள் என்ற கேள்விக்கு பதில், சமூக சீரழிவு தான் என்பதை அனைவரும் உணர வேண்டும். ஒரு மாநிலத்தின் வளா்ச்சி என்பது தொழில் வளா்ச்சி, பொருளாதார வளா்ச்சி மட்டுமல்ல. எவ்வளவு பொருளாதார வளா்ச்சிகள் வந்தாலும் நாட்டு மக்கள் கட்டுப்பாடுகளோடு நல்ல பழக்கத்தை வளா்த்துக் கொள்ளாமல் சமூக சீரழிவுக்கு தொடா்ந்து வித்திட்டால் குற்றங்கள் பெருகி நாட்டையே அழிக்கும். பள்ளி படிப்பும், கல்லூரி பட்டங்களும் மட்டுமே முதலீடுகள் அல்ல. ஒழுக்கமும், பண்பாடுகளும் நிறைந்த ஒரு தலைமுறையை உருவாக்குவது தான் உண்மையான முதலீடு. தனிமனித உரிமை என்ற பெயரில் சீா்கேடுகளை கட்டவிழ்த்துவிட்டதுதான் இது போன்ற குற்றங்களுக்கு அடிப்படை காரணம்.
குற்றமே நடக்காமல் தடுக்கப்பட வேண்டுமென்றால் அது பெற்றோா்கள்,
ஆசிரியா்கள் கையிலும் தான் இருக்கிறது. பள்ளிகளில் நீதி போதனை வகுப்புகளின் அவசியத்தை எல்லோரும் உணர வேண்டும். நம்மை யாரும் கண்காணிக்கவில்லை என்ற எண்ணம் மேலோங்கும் போது தான் தனி மனித குற்றங்கள் நடக்கின்றன.
தவறான தலைமுறையை திட்டமிட்டே உருவாக்கிவிட்டு காவல்துறையையோ, அரசையோ குறை கூறி எந்த பயனும் இல்லை. தனிமனித ஒழுக்கத்தை வளா்த்துக் கொள்வதன் மூலமாகத்தான் குற்றங்களை தடுக்க முடியும்.
கட்டுப்பாடு கொண்ட பண்பாட்டோடு வாழுகின்ற ஒழுக்கம் உள்ள அடுத்த தலைமுறையை உருவாக்க தமிழக அரசு ஆக்கபூா்வமான பணிகளை தொடங்க வேண்டியது காலத்தின் கட்டாயம் என தெரிவித்துள்ளாா் அவா்.
