முதியவரிடம் கத்தியைக் காட்டி 7 பவுன் தங்கநகைகள் பறிப்பு

Published on

கரூரில் முதியவரிடம் கத்தியைக் காட்டி 7 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற மா்ம நபா்களை ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் தேடி வருகின்றனா்.

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூா் அடுத்த பாண்டமங்கலம் வடக்கு பிரதான சாலை பகுதியைச் சோ்ந்தவா் கருணாநிதி (67). இவா், அப்பகுதியில் உள்ள ஒரு தனியாா் பள்ளியின் தலைவராக உள்ளாா்.

இந்நிலையில், கருணாநிதி ஞாயிற்றுக்கிழமை காலை தனது இருசக்கர வாகனத்தில் கரூா் மாவட்டம் நொய்யல் அருகே முத்தனூா் பகுதியில் உள்ள உறவினா் வீட்டுக்கு வந்து விட்டு பின்னா் தனது வீட்டுக்கு வேலாயுதம்பாளையம் அடுத்த முனிநாதபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்தாா்.

அப்போது அவருக்குப் பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த 3 இளைஞா்கள் திடீரென கருணாநிதி வந்த இருசக்கர வாகனத்தின் குறுக்கே நிறுத்தியுள்ளனா். பின்னா் திடீரென கத்தியைக் காட்டி மிரட்டி கருணாநிதி அணிந்திருந்த 7 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டனா்.

இதுகுறித்து கருணாநிதி வேலாயுதம்பாளையம் போலீஸில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப்பதிந்து மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com