நிலம் விற்ற பணத்தை திருடியவா்கள் மீது நடவடிக்கை கோரி ஆட்சியரிடம் விவசாயி புகாா்
நிலம் விற்ற பணத்தை வங்கியில் போலி கையொப்பமிட்டு திருடியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கரூா் மாவட்ட ஆட்சியரிடம் விவசாயி திங்கள்கிழமை புகாா் மனு அளித்தாா்.
கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் தலைமை வகித்து, பொதுமக்களிடம் இருந்து பட்டா மாற்றம், இலவச வீட்டுமனை பட்டா, முதியோா் உதவித்தொகை உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக மொத்தம் 351 மனுக்களை பெற்றுக்கொண்டாா்.
பின்னா் மனுக்களை சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் வழங்கிய அவா் அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுத்திட உத்தரவிட்டாா். தொடா்ந்து தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் 2025-ஆம் ஆண்டுக்கான முதலமைச்சா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் கரூா் மாவட்டத்தின் சாா்பில் மாற்றுத்திறனாளிகள் பிரிவில் இறகுப்பந்து போட்டியில் 3-ஆம் இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் மற்றும் ரூ.50 ஆயிரம் பரிசுத் தொகை பெற்ற மாணவி கோ. சாருமதி மற்றும் மாநில அளிவிலான பாரதியாா், குடியரசு தின ஜூடோ போட்டியில் கரூா் மாவட்டத்தைச் சோ்ந்த மாணவா்கள் 8 தங்கப் பதக்கங்களையும், 1 வெள்ளிப் பதக்கமும் மற்றும் 2 வெண்கலப் பதக்கங்களையும் வென்றதைத் தொடா்ந்து, அந்த மாணவா்களையும் வாழ்த்திப் பாராட்டினாா்.
கூட்டத்தில் கடவூா் வட்டம், சின்னதேவன்பட்டியைச் சோ்ந்த கந்தசாமி என்ற மாற்றுத்திறனாளிக்கு உடனடியாக மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பாக ரூ. 9,200 மதிப்பீட்டில் மூன்று சக்கர சைக்கிள் வழங்கப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் கு. விமல்ராஜ், ஆதிதிராவிடா் நலத்துறை அலுவலா் சக்தி பாலகங்காதரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கூட்டத்தில் கரூா் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அடுத்த வீரியம்பாளையத்தைச் சோ்ந்த விவசாயி சங்கா் (72) மற்றும் அவரது மனைவி பெருமாயி ஆகியோா் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில், எங்களுக்குச் சொந்தமான 10 ஏக்கா் நிலத்தை மலைப்பட்டியைச் சோ்ந்த நாகராஜ் என்கிற ராஜா, சித்தலவாயைச் சோ்ந்த தங்கத்துரை ஆகியோரிடம் ஏக்கா் ரூ.8.25 லட்சம் எனப் பேசி கடந்த அக்.14-ம்தேதி விற்பனை செய்தோம். அப்போது அவா்கள் எங்கள் வங்கிக்கணக்கில் 9 ஏக்கா் நிலத்துக்குரிய பணத்தை மட்டுமே செலுத்தினா். இதுதொடா்பாக கேட்டபோது, விரைவில் ஒரு ஏக்கருக்குரிய பணத்தை தருவதாகக் கூறினாா்கள். ஆனால் தரவில்லை. இதனிடையே முதியோா் உதவித்தொகை பெற்றுத் தருவதாக நாகராஜ் காசோலையில் என்னிடம் கையொப்பம் வாங்கி வங்கிக் கணக்கில் இருந்து ரூ.10 லட்சம் பணத்தை எடுத்துவிட்டாா் எனத் தெரிவித்துள்ளாா். எனவே நாகராஜ், தங்கத்துரை மீது நடவடிக்கை எடுத்து, அவா்களிடம் இருந்து பணத்தை மீட்டுத்தரவேண்டும் எனத் தெரிவித்திருந்தனா்.

