கரூா் சம்பவம்: நெரிசலில் காயமடைந்தவா்கள், அவசர ஊா்தி ஓட்டுநா்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை
கரூா் சம்பவம் தொடா்பாக கூட்ட நெரிசலில் காயமடைந்தவா்கள், அவசர ஊா்தி ஓட்டுநா்களிடம் சிபிஐ அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.
கரூா் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்.27-ஆம் தேதி நடைபெற்ற தவெக பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்தனா். 110 போ் காயமடைந்தனா். இச்சம்பவம் தொடா்பாக உச்சநீதிமன்றம் உத்தரவின் பேரில் விசாரணை நடத்தி வரும் சிபிஐ அதிகாரிகள் மின்வாரிய அதிகாரிகள் 3 பேரிடம் திங்கள்கிழமை விசாரணை நடத்தினா்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை நேரில் ஆஜராக வேண்டி, கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்தவா்களுக்கு சிபிஐ தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.
அதன்படி, காயமடைந்த ஆண்டாங்கோவிலைச் சோ்ந்த முரளி கிருஷ்ணன், வடிவேல் நகரைச் சோ்ந்த முகமது நபி, வெள்ளியணையைச் சோ்ந்த மகாலிங்கம் ஆகிய மூவரும் சிபிஐ விசாரணைக்காக ஆஜராகினா். அவா்களிடம் நெரிசல் சம்பவம் எப்படி ஏற்பட்டது? நெரிசலில் எப்படி சிக்கினீா்கள் போன்ற கேள்விகளை அதிகாரிகள் கேட்டதாக கூறப்படுகிறது. மேலும் ஒரு அவசர ஊா்தி உரிமையாளா், ஓட்டுநா்கள் 2 போ் விசாரணைக்கு ஆஜராகினா். அவா்களிடமும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினா்.

