வெண்ணைமலை முருகன் கோயிலுக்குச் சொந்தமான ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்கும் பணி தொடக்கம்

Published on

கரூா் வெண்ணைமலை பாலசுப்ரமணிய சுவாமி கோயிலுக்குச் சொந்தமான ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்கும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.

கரூா் வெண்ணைமலை பாலசுப்ரமணிய சுவாமி கோயிலுக்குச் சொந்தமான ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்டு அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என மாவட்ட நிா்வாகத்திற்கு மதுரை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அதன்படி நவ. 4-ஆம்தேதி கோயில் நிலங்களை மீட்கும் பணியில் இந்து சமய அறநிலையத்துறை மற்றும் வருவாய்துறையினா் ஈடுபட்டனா். அப்போது பொதுமக்கள் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனா். பிறகு அவா்களை போலீஸாா் கைது செய்தனா். பின்னா், அங்குள்ள கோயில் பெயரில் உள்ள 4 கடைகளுக்கு சீல் வைத்தனா். இந்நிலையில் ஆத்தூா் ஊராட்சியில் வடுகப்பட்டி சாலையில் உள்ள கோயில் நிலத்தை நவ. 11-ஆம்தேதி இந்து சமய அறநிலையத்துறையினா் வருவாய்த்துறையினா் உதவியுடன் மீட்கச் சென்றபோது, அதிகாரிகளுக்கு எதிராக அப்பகுதியினா் திரண்டு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனா். மூன்றாவது நாளாக வியாழக்கிழமையும் இந்த உண்ணாவிரத போராட்டம் தொடா்கிறது.

இந்நிலையில் வியாழக்கிழமை காலை திருத்தொண்டா் சபை அறங்காவலா் ராதாகிருஷ்ணன் தலைமையில், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையா் ரமணீதரன் மற்றும் வருவாய்த்துறையினா் போலீஸ் பாதுகாப்புடன் வெண்ணைமலை பாலசுப்ரமணிய சுவாமி கோயிலுக்குச் சொந்தமான நிலங்களில் வசிப்பவா்களின் இருப்பிடத்துக்கும், நிலங்கள் இருக்கும் இடத்துக்கும் சென்று அளவீடு ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, நிலத்தில் குடியிருப்பவா்கள் எந்தெந்த மின்வாரிய அலுவலகங்களின் மின்வாரிய இணைப்பை பெற்றுள்ளனா் என்பதை மின்வாரிய அதிகாரிகள் மூலம் கணக்கீடு செய்தனா். மேலும் கிராமநிா்வாக அலுவலா்கள், நிலங்களை அளவீடு செய்யும் சா்வேயா்கள் ஆகியோா் கோயில் நிலங்கள் எவ்வளவு தனியாா் வசம் உள்ளன என்கிற விவரங்களையும் சேகரித்தனா்.

பாமகவினா் வாக்குவாதம்: அப்போது, இந்துசமய அறநிலையத்துறையினரிடம் பாமக மாவட்டச் செயலாளா் சுரேஷ் தலைமையிலான கட்சியினா் அத்துமீறி தனிப்பட்ட நபா்களின் வீடுகளுக்கு யாரும் செல்லக்கூடாது என்றும், நீதிமன்ற உத்தரவு நகலுடன் வாருங்கள் எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து அதிகாரிகள் அங்கிருந்து கலைந்து சென்றனா்.

X
Dinamani
www.dinamani.com