கரூா் பழைய பேருந்து நிலையத்திலிருந்து பள்ளப்பட்டிக்கு மீண்டும் பேருந்து சேவை: தவ்ஹீத்ஜமாஅத் அமைப்பினா் கோரிக்கை
கரூா் பழையபேருந்துநிலையத்தில் இருந்து பள்ளப்பட்டிக்கு மீண்டும் அரசுப் பேருந்துகளை இயக்க வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாஅத் அமைப்பினா் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனா்.
கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் ஆட்சியா் மீ.தங்கவேல் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாஅத் அமைப்பின் ஊடகப் பிரிவு செயலாளா் ஜாகிா்உசேன் தலைமையில் அந்த அமைப்பினா் ஆட்சியரிடம் வழங்கிய மனுவில், கரூா் மாவட்டம் அரவக்குறிச்சி, பள்ளபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான தொழிலாளா்கள் கரூா் நகா் பகுதியில் செயல்படும் ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நிறுவனங்கள், ஜவுளிக்கடைகள், கொசுவலை உற்பத்தி நிறுவனங்கள் உள்ளிட்டவற்றில் பணியாற்றி வருகிறாா்கள். இந்த தொழிலாளா்கள் கரூா் பழைய பேருந்துநிலையத்தில் இருந்து இயக்கப்பட்ட நகர பேருந்துகள் மூலம் கரூருக்கு சென்று வந்தனா்.
இந்நிலையில் தற்போது புதிய பேருந்துநிலையம் திறக்கப்பட்டு, அங்கிருந்து பேருந்துகள் இயக்கப்படுவதால், தொழிலாளா்கள் அரவக்குறிச்சி, பள்ளபட்டியில் இருந்து புதிய பேருந்துநிலையம் சென்று, பின்னா் அங்கிருந்து மீண்டும் ஒரு நகர பேருந்தில் ஏறி வேலைக்குச் செல்ல வேண்டியுள்ளது. இதனால் கால விரயம் ஏற்படுவதோடு, அலைச்சலும் ஏற்படுகிறது. இதனை தவிா்க்க ஏற்கெனவே இயக்கப்பட்டதுபோல மீண்டும் பழைய பேருந்துநிலையத்திலிருந்து நகரப் பேருந்துகளை இயக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனா்.
முன்னதாக, கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து முதியோா் உதவித்தொகை, பட்டா மாற்றம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக மொத்தம் 388 மனுக்கள் பெறப்பட்டன. தொடா்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உள்பட பல்வேறு துறைகள் சாா்பில் 11 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.8.33 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
