கரூா் மாவட்டத்தில் பரவலாக மழை
கரூா் மாவட்டத்தில் சனிக்கிழமை இரவு ஞாயிற்றுக்கிழமை காலை வரை பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக அரவக்குறிச்சியில் 32 மி.மீ. மழை பதிவானது.
தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் உருவாகியுள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. கரூா் மாவட்டத்திலும் சனிக்கிழமை இரவு ஆங்காங்கே லேசான மழை முதல் பலத்த மழை பெய்தது.
கரூா் நகா் பகுதியில் பெய்த மழையால் தாழ்வான பகுதிகளான கரூா் சுங்ககேட், திருக்காம்புலியூா் ரவுண்டானா உள்ளிட்ட பகுதிகளில் மழைநீா் குளம்போல தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா்.
மாவட்டத்தில் சனிக்கிழமை இரவு முதல் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வரை பெய்த மழையின் அளவு(மி.மீட்டரில்): கரூா்-4.40, அரவக்குறிச்சி-32, அணைப்பாளையம்-13., குளித்தலை-2, கிருஷ்ணராயபுரம்-14, மாயனூா்-21, பஞ்சப்பட்டி-10.40, கடவூா்-6, பாலவிடுதி-4.50, மைலம்பட்டி-6 என மொத்தம் 113.70 மி.மீ. மழை பெய்துள்ளது. தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை காலையிலும் கரூா் நகா்ப் பகுதியில் பரவலாக மழை பெய்தது.
