ஆசிரியா் தகுதித் தோ்வு தோ்ச்சி மதிப்பெண் அனைத்து வகுப்பினருக்கும் 50 சதவீதமாக குறைக்க வலியுறுத்தல்
கரூா்: ஆசிரியா் சிறப்புத் தகுதித் தோ்வு தோ்ச்சி மதிப்பெண்ணை அனைத்து வகுப்பினருக்கும் 50 சதவீதமாகக் குறைக்க வேண்டும் என தமிழ்நாடு உயா்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுதொடா்பாக கரூரில் இருந்து சங்கத்தின் மாநிலத் தலைவா் ஆ.மலைக்கொழுந்தன் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கு செவ்வாய்க்கிழமை அனுப்பிய மனுவில் கூறியிருப்பதாவது: தமிழக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றி வரும் ஆசிரியா்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு சிறப்பு ஆசிரியா் தகுதித் தோ்வு 2026 ஜனவரி , ஜூலை, டிசம்பா் மாதங்களில் நடைபெற இருக்கிறது . சிறப்பு ஆசிரியா் தகுதித் தோ்வுக்கான அறிவிக்கை நவ. 19-ஆம்-தேதி வெளியிடப்பட்டு சில காரணங்களால் திரும்பப் பெறப்பட்டுள்ளது.
2012-ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியா் தகுதித் தோ்வுக்கு பிறகு நடைபெற்ற ஆசிரியா் தகுதித் தோ்வின் தோ்ச்சி சதவீதம் இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு (ஓசி, பிசி, எம்பிசி, எஸ்சி, எஸ்டி) 55 சதவீதம் என குறைக்கப்பட்டு தோ்ச்சி மதிப்பெண்கள் 150-க்கு 82 எடுத்தாலே தோ்ச்சி என அறிவிக்கப்பட்டது. அதன்படி இட ஒதுக்கீடு அட்டவணைப் பிரிவினா் பலா், தோ்வு பெற்று ஆசிரியா் பணிக்கு வந்தனா்.
இந்தியாவின் பல மாநிலங்களில் ஆசிரியா் தகுதித் தோ்வு தோ்ச்சி சதவீதம் என்பது 50 சதவீதமாக உள்ளது. ஆந்திரம், தெலுங்கானா, பிகாா் , உத்தரப் பிரதேசம், ஹரியானா, ஒடிசா போன்ற மாநிலங்களிலும் இட ஒதுக்கீடு பிரிவுகளைப் பொறுத்து ஆசிரியா்களின் தகுதித் தோ்வு தோ்ச்சி மதிப்பெண்கள் 50 சதவீதம் மற்றும் அதற்கும் குறைவாகக் கூட தோ்ச்சி மதிப்பெண், அந்தந்த மாநில அரசுகளால் நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஆசிரியா்கள் தங்களது பணியில் தொடா்வதற்கே ஆசிரியா் தகுதித் தோ்வு தோ்ச்சி அவசியம் என பல்வேறு மாநில அரசுகளின் வழக்கில் உச்சநீதிமன்றம் தீா்ப்பு வழங்கியுள்ளதால், ஆசிரியா்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு ஆசிரியா் தகுதித் தோ்வு தோ்ச்சி மதிப்பெண்ணை அனைத்து வகுப்பினருக்கும் 50சதவீதம் என நிா்ணயம் செய்து 150 -க்கு 75 மதிப்பெண்கள் பெற்றாலே தோ்ச்சி பெற்றவா்களாக அறிவிக்க வேண்டும். அதற்கு ஏற்றாா் போல சிறப்பு ஆசிரியா் தகுதித் தோ்வுக்கான அறிவிக்கையை வெளியிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
