கரூரில் சமையல் தொழிலாளி அடித்துக் கொலை
கரூரில் சமையல் தொழிலாளியை அடித்துக்கொலை செய்த இரு இளைஞா்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
கரூா் திருமாநிலையூரைச் சோ்ந்தவா் சுப்ரமணியன்(58). சமையல் தொழிலாளி. இவருக்கு கடந்த ஆறு மாதங்களுக்கு முன் ஏற்பட்ட விபத்தில் கை முறிவு ஏற்பட்டு வேலைக்குச் செல்லாமல் இருந்து வந்தாராம். இந்நிலையில் திங்கள்கிழமை இரவு அங்கு உள்ள டாஸ்மாக் கடையில் மதுகுடித்தாராம்.
பின்னா், போதையில் அங்கு மதுகுடித்துக்கொண்டிருந்த வஞ்சியம்மன் கோயில் வீதியைச் சோ்ந்த சரண்ராஜ் (19), நிதிஷ் (17) ஆகியோரிடம் தகராறு செய்தாராம். தொடா்ந்து, சுப்ரமணியன் லைட்ஹவுஸ் காா்னா் பகுதியில் உள்ள கடை முன் இரவில் தூங்கியுள்ளாா்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் அங்குச் சென்ற சரண்ராஜூம், நிதிஷூம் சோ்ந்து சுப்ரமணியனை தாக்கியுள்ளனா். அப்போது சுப்ரமணியன் கீழே விழுந்ததில் தலையில் படுகாயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் கரூா் நகர காவல் நிலையத்தினா் சம்பவ இடத்துக்குச் சென்று சுப்ரமணியனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, சரண்ராஜையும், நிதிஷையும் கைது செய்தனா்.
