கரூா் சம்பவம்: தவெக மாவட்டச் செயலரை 2 நாள்கள் விசாரிக்க சிறப்புக் குழுவுக்கு அனுமதி

கரூா் சம்பவம்: தவெக மாவட்டச் செயலரை 2 நாள்கள் விசாரிக்க சிறப்புக் குழுவுக்கு அனுமதி

Published on

கரூா் சம்பவம் தொடா்பாக கைது செய்யப்பட்ட தவெக மாவட்டச் செயலரை 2 நாள்கள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் வியாழக்கிழமை அனுமதி வழங்கியது.

கரூரில் செப். 27-ஆம் தேதி நடைபெற்ற தவெக தலைவா் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்தனா். இந்த சம்பவம் தொடா்பாக சிறப்புக் குழுவினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இந்நிலையில் சம்பவம் தொடா்பாக கைது செய்யப்பட்ட தவெக மேற்கு மாவட்டச் செயலா் மதியழகனை 5 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிறப்புக் குழுவினா் கடந்த செவ்வாய்க்கிழமை கரூா் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் 1-இல் மனு தாக்கல் செய்தனா்.

இந்நிலையில், திருச்சி சிறையில் அடைக்கப்பட்டிருந்த தவெக மாவட்டச் செயலாளா் மதியழகன் வியாழக்கிழமை கரூா் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் 1-இல் நீதிபதி பரத்குமாா் முன்பு ஆஜா்படுத்தப்பட்டாா்.

அப்போது வழக்கை விசாரித்த நீதிபதியிடம், மதியழகன் தரப்பு வழக்குரைஞா்கள், ஏற்கெனவே கரூா் நகர காவல்நிலையத்தில் மதியழகன் விசாரணை செய்யப்பட்டுள்ள நிலையில், மீண்டும் சிறப்புக் குழுவினா் ஏன் விசாரிக்க வேண்டும். இதனால் சிறப்புக் குழுவினா் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்கக் கூடாது என்றனா். இதையடுத்து இருதரப்பினரின் வாதங்களையும் ஏற்றுக்கொண்ட நீதிபதி பரத்குமாா், சிறப்புக் குழுவினா் மதியழகனிடம் 2 நாள்கள் காவலில் விசாரிக்கலாம். மேலும் விசாரணையின்போது அவருக்கு எந்தவித துன்புறுத்தலும் செய்யக்கூடாது. மீண்டும் அவரை சனிக்கிழமை (அக்.11) பிற்பகல் 3 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்த வேண்டும் என உத்தரவிட்டாா். இதையடுத்து மதியழகனை சிறப்புக் குழுவினா் விசாரணைக்கு அழைத்துச் சென்றனா்.

X
Dinamani
www.dinamani.com