ரயில்வே சுரங்கப் பாதையில் பல நாள்களாக தேங்கியுள்ள மழைநீரை அகற்ற கோரிக்கை
கரூா் குளத்துப்பாளையத்தில் ரயில்வே சுரங்கப் பாதையில் (குகைவழி பாதை) பல நாள்களாக தேங்கிக்கிடக்கும் மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக நல ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கரூா் குளத்துப்பாளையம் ரயில்வே சுரங்கப் பாதையில் கடந்த 10 நாள்களுக்கு முன் பெய்த மழையில் குளத்துப்பாளையம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து மழைநீருடன் கழிவு நீா் அடித்து வரப்பட்டு தேங்கிக்கிடக்கிறது.
இந்த பாதை வழியாகத்தான் குளத்துப்பாளையம் அரசு பள்ளிக்கு ஏராளமான மாணவ, மாணவிகள் சைக்கிள்களில் சென்று வருகிறாா்கள். மேலும் வையாபுரி நகா், செங்குந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளையும், குளத்துப்பாளையம், வெங்கமேடு உள்ளிட்ட பகுதிகளையும் இணைக்கும் சாலையாகவும் இந்தப் பாதை இருப்பதால் தேங்கிக்கிடக்கும் மழைநீரை உடனே அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும் சமூக நல ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

