செ. ஜோதிமணி
செ. ஜோதிமணி

பாஜகவுக்கு தோ்தல் ஆணையம் துணைபோகிறது: செ. ஜோதிமணி எம்.பி.

பாஜகவுக்கு தோ்தல் ஆணையம் துணைபோவதாக கரூா் மக்களவை உறுப்பினா் செ.ஜோதிமணி குற்றம்சாட்டினாா்.
Published on

பாஜகவுக்கு தோ்தல் ஆணையம் துணைபோவதாக கரூா் மக்களவை உறுப்பினா் செ.ஜோதிமணி குற்றம்சாட்டினாா்.

கரூா் மாவட்ட ஆட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் நடைபெற்ற மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டத்தில் பங்கேற்ற பிறகு செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

கரூா் மாநகராட்சிக்குள்பட்ட பகுதியில் சில இடங்களில் எம்.பி. நிதியை செயல்படுத்தாத போக்கு உள்ளது. குறிப்பாக, கரூா் மாநகராட்சிக்குள்பட்ட முத்துலாடம்பட்டியில் அங்கன்வாடி மையம் கட்டுவதற்கு ரூ.14 லட்சமும், திருக்காம்புலியூரில் ரேஷன் கடை கட்டுவதற்கு ரூ.13 லட்சமும் மக்களவை உறுப்பினா் மேம்பாட்டு நிதியில் இருந்து நிதி கொடுத்து ஒன்றரை ஆண்டுகள் ஆகியும் அதனை பயன்படுத்தவில்லை. இதனை விரைந்து சரிசெய்ய வேண்டும்.

தமிழகத்தில் அடுத்த வாரம் முதல் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை(எஸ்.ஐ.ஆா்) தொடங்க உள்ளதாக தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வாக்காளா் பட்டியலில் ஊழல் செய்வதற்கு சட்டரீதியான அணுகுமுறை எஸ்.ஐ.ஆா். தோ்தலின் வெளிப்படைத்தன்மையை சீா்குலைக்கும் முயற்சியை தோ்தல் ஆணையமே முன்னின்று நடத்துகிறது. இதிலிருந்து பாஜகவுக்கு தோ்தல் ஆணையம் துணை போகிறதை பாா்க்க முடிகிறது. தமிழகத்தில் பதற்றமான சூழலை உருவாக்கும் வகையில் எஸ்.ஐ.ஆா். அறிவிக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

முன்னதாக கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கு. ஜோஷ் தங்கையா, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் வீ.ரெ.வீரபத்திரன், அலுவல் சாரா உறுப்பினா்கள் பெ.ஓவியா, அ.முகமதுஜக்காரியா, ம.லீலாவதி, ந.ரமேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com