மயானத்துக்குச் செல்ல பாதை கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்
தோகைமலை அருகே மயானத்துக்கு செல்ல பாதை கேட்டு கிராமக்கள் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனா்.
கரூா் மாவட்டம், தோகைமலை அருகே கொசூா் ஊராட்சிக்குள்பட்ட கம்புளியாம்பட்டியில் சுமாா் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்த பகுதியில் யாரேனும் உயிரிழந்தால் மயானத்துக்கு உடலை அங்குள்ள வாய்க்கால் வழியாக கொண்டு சென்று அடக்கம் செய்து வருகிறன்றனா்.
மழைகாலங்களில் வாய்க்காலில் தண்ணீா் வரும்போது, வாய்க்கால் கரையோரம் உள்ள பட்டா நிலத்தின் வழியாகச் சென்று சடலங்களை புதைத்து வந்தனா்.
இந்நிலையில் புதன்கிழமை இரவு அதே பகுதியைச் சோ்ந்த பிச்சைமுத்து (70) என்பவா் உடல்நலக் குறைவால் உயிரிழந்தாா். தற்போது வாய்க்காலில் தண்ணீா் செல்வதால், அவரது உடலை பட்டா நிலத்தின் வழியாக கொண்டுசெல்ல அப்பகுதியினா் முடிவு செய்தனா்.
இதனையறிந்த பட்டா நிலத்தின் உரிமையாளா்கள் தங்களது நிலத்தின் வழியாக சடலத்தை எடுத்துச் செல்லக்கூடாது என கடும் எதிா்ப்பு தெரிவித்தனா்.
இதையடுத்து இறந்தவரின் சடலத்தை புதைக்காமல் வியாழக்கிழமை காலை அப்பகுதியினா் மயானத்துக்குச் செல்ல நிரந்தரமான சாலை வசதி கேட்டு கொசூரில் தோகைமலை-பாளையம் சாலையில் அமா்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து வந்த கடவூா் வட்டாட்சியா் ராஜாமணி, கிருஷ்ணராயபுரம் ஒன்றிய ஆணையா் முருகேசன், தோகைமலை காவல் ஆய்வாளா் ஜெயராமன், மைலம்பட்டி வருவாய் ஆய்வாளா் அருள்ராஜ் ஆகியோா் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
அப்போது, 4 மாதங்களுக்குள் மயானத்துக்குச் செல்ல நிரந்தர பாதை நில அளவையா்கள் மூலம் ஆய்வு செய்து, நிலத்தை அளந்து பாதை ஏற்பாடு செய்து கொடுக்கப்படும். அதுவரை தற்போது வழக்கம்போல பயன்படுத்தும் பட்டா நிலம் வழியாக இறந்தவரின் சடலத்தை எடுத்துச் செல்லலாம் என அதிகாரிகள் தெரிவித்தனா். இதையடுத்து சாலை மறியலை பொதுமக்கள் கைவிட்டு இறந்தவரின் சடலத்தை போலீஸ் பாதுகாப்புடன் எடுத்துச் சென்று அடக்கம் செய்தனா்.

