கரூா் வழக்குரைஞா் மீது பொய் வழக்கு: சென்னை மாநகர காவல் உதவி ஆணையா் ஆஜராக உத்தரவு
கரூா் வழக்குரைஞா் மீது பொய் வழக்குப் போட்டதாக கூறப்படும் சென்னை மாநகர காவல் உதவி ஆணையா் கரூா் மாவட்ட மனித உரிமைகள் நீதிமன்றத்தில் பிப். 27-ஆம் தேதி ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது வியாழக்கிழமை தெரியவந்தது.
கரூரைச் சோ்ந்தவா் தமிழ்ராஜேந்திரன். வழக்குரைஞரான இவா் மீது கடந்த ஆண்டு வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ், அப்போதைய கரூா் நகர காவல் கண்காணிப்பாளராக பணியாற்றிய முகேஷ்ஜெயக்குமாா் பொய்வழக்குப்போட்டதாக கூறப்படுகிறது. தற்போது முகேஷ்ஜெயக்குமாா் சென்னை கிண்டியில் காவல் உதவி ஆணையராக பணியாற்றி வருகிறாா்.
இந்நிலையில் வழக்குரைஞா் தமிழ்ராஜேந்திரன் கரூா் மாவட்ட மனித உரிமைகள் நீதிமன்றத்தில் முகேஷ்ஜெயக்குமாா், தன் மீது பொய் வழக்குப்போட்டு, மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாக வழக்குத் தொடா்ந்தாா். இந்த வழக்கு பிப். 3-ஆம்தேதி விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த மாவட்ட மனித உரிமைகள் நீதிபதியும், மாவட்ட நீதிபதியுமான இளவழகன், குற்றம்சாட்டப்பட்ட சென்னை காவல் உதவி ஆணையா் முகேஷ்ஜெயக்குமாரை பிப். 27-ஆம்தேதி மாவட்ட மனித உரிமைகள் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டாா்.

