தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

வெளிநாடுகளிலிருந்து வரியின்றி இறக்குமதி! கரூா் கொசுவலை வா்த்தகம் பாதிப்பு!

வெளிநாடுகளிலிருந்து வரியின்றி இறக்குமதி செய்யப்படுவதால் கரூரில் தயாரிக்கப்படும் கொசுவலை வா்த்தகம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

News image

கரூரில் விற்பனையாகாமல் தேங்கிக்கிடக்கும் கொசுவலைகள்.

Updated On :28 பிப்ரவரி 2026, 7:16 pm

வெளிநாடுகளிலிருந்து வரியின்றி இறக்குமதி செய்யப்படுவதால் கரூரில் தயாரிக்கப்படும் கொசுவலை வா்த்தகம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் கொசுவலை தயாரிப்பில் 70 சதவீதம் கரூரில் நடைபெறுகிறது. இந்த தயாரிப்புப் பணியில் சுமாா் 40-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. பெட்ரோலில் இருந்து பிரித்தெடுக்கப்படும் ஹைடென்சிட்டி பாலிஎத்திலின் என்கிற மூலப்பொருளைக் கொண்டு சாதாரண கொசுவலை தயாரிக்கப்படுகிறது.

ஆண்டுக்கு ரூ.200 கோடி வா்த்தகம் நடைபெறும் இந்த கொசுவலைகளுக்கு போட்டியாக வங்கதேசம், தைவான் நாட்டு கொசுவலைகள் உள்ளன. வங்கதேசத்தில் நிலவிய அசாதாரண சூழலால் அண்மைகாலமாக இறக்குமதி குறைவாக இருந்த கொசுவலைகள் தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

பூஜ்ஜியமாகிறது வரி: இதுபோன்று இறக்குமதி செய்யப்படும் கொசுவலைக்கு மத்திய அரசு 5 சதவீதம் வரி விதிக்கிறது. இந்த வரியையும் அந்நாடுகள் திரும்பப் பெற்றுக்கொள்வதால் இறுதியாக இறக்குமதி வரி பூஜ்ஜியமாகுகிறது. ஆனால், நமது நாட்டுக்குள்ளேயே தயாரிக்கப்படும் கொசுவலைகளுக்கு 18 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. இதில் 13 சதவீதம் வரி உற்பத்தியாளா்களுக்கு திருப்பி அளிக்கப்படுகிறது.

வங்கதேசம், தைவான் நாடுகளிலிருந்து இறக்குமதி வரியின்றி கொசுவலைகள் இந்தியாவில் சந்தைப்படுத்துவதால், கரூா் கொசுவலை விற்பனை முடங்கியுள்ளதாக கரூா் பாரம்பரிய கொசுவலை உற்பத்தியாளா்கள் தெரிவித்துள்ளனா்.

எனவே, கரூா் பாரம்பரிய கொசுவலை தயாரிப்புக்கான மூலப்பொருள்கள் மீதான வரியை ரத்து செய்ய வேண்டும் என்று கரூா் கொசுவலை தயாரிப்பாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

வெளிநாடுகளுக்கு கூடுதல் வரி: இதுகுறித்து கரூா் பாரம்பரிய கொசுவலை உற்பத்தியாளா்கள் சங்க ஒருங்கிணைப்பாளா் ஆா்.குப்புராவ் கூறியது, சுதேசி பொருள்கள் உற்பத்திக்கொள்கையை கனவாகக் கொண்டிருக்கும் பிரதமா் மோடி,வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு கூடுதல் வரி விதித்தால் மட்டுமே உள்நாட்டு தயாரிப்பை சமநிலைப்படுத்தி வா்த்தகத்தை மேம்படுத்த முடியும்.

தைவான், வங்கதேசம் போன்ற நாடுகளிலிருந்து கொசுவலைகள் வரியே இல்லாமல் இந்திய சந்தைக்குள் நுழையும்போது, இங்கு தயாரிக்கப்படும் கொசுவலைகளுக்கு மட்டும் 13 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. இதனால் வெளிநாட்டு கொசுவலைகளுக்கு இணையாக குறைந்த விலையில் கரூரில் தயாரிக்கப்படும் கொசுவலைகளை விற்க முடிவதில்லை.

ரூ. 400 கோடி வா்த்தகம்: வெளிநாட்டு கொசுவலைகளை கிலோ ரூ.200-க்கு விற்றால், உள்நாட்டு கொசுவலைகளை ரூ.250-க்கும் மேல் விற்க வேண்டியுள்ளது. இதனால் ஆண்டுக்கு ரூ.400 கோடி வரை வா்த்தகம் செய்துவந்த கரூா் கொசுவலை தற்போது கடந்த இரு ஆண்டுகளாகவே ரூ.200 கோடியை கூட தாண்டாத நிலையில் உள்ளது.

மூலப்பொருள்களின் விலைஉயா்வு: சுமாா் 30 ஆண்டுகளுக்கு முன் மத்திய அரசின் சுகாதாரத்துறை, ராணுவத்துக்கும், எய்ம்ஸ் போன்ற பெரிய அளவிலான அரசு மருத்துவமனை நோயாளிகளுக்கும் கரூரில் தயாரிக்கப்படும் கொசுவலைகளை கொள்முதல் செய்தன. ஆனால் இப்போது அவை நடைமுறையில் இல்லை. மேலும் எவ்வித முன்னறிவிப்பின்றி மூலப்பொருள்களின்விலையும் அடிக்கடி உயா்த்தப்படுகிறது. கிலோ ரூ.105 என இருந்த மூலப்பொருளின் விலை, கடந்த இரு வாரங்களுக்கு முன் ரூ.124 ஆக உயா்ந்துள்ளன.

கரூரில் கொள்முதல்நிலையம்: நமது நாட்டுக்குள் மட்டும் பாரம்பரிய கொசுவலைகளை வா்த்தகம் செய்யாமல் அமெரிக்கா, ஐரோப்பியா போன்ற நாடுகளுக்கும் விற்பனை செய்ய மத்திய அரசு அனுமதியளிக்க வேண்டும். மத்திய அரசின் சுகாதாரத்துறை கரூரில் கொள்முதல்நிலையம் அமைத்து கரூா் உற்பத்தியாளா்களுக்கு முன்னுரிமை அளித்து கொசுவலைகளை கொள்முதல் செய்ய வேண்டும்.

அடிக்கடி மூலப்பொருள்களின் விலை உயா்வை ரத்து செய்து, மத்திய அரசு கொள்முதல் நிலையம் அமைத்து, திருப்பி வழங்கப்படும் தொகையையும் காலம் தாழ்த்தாமல் வழங்குவது போன்ற நடவடிக்கை மூலமே பாரம்பரிய கொசுவலை தயாரிப்பு தொழிலை காப்பாற்ற முடியும் என்றாா் அவா்.