கரூா் வாக்குப்பதிவு இயந்திரங்களின் முதல்நிலை சரிபாா்ப்பு பணி நிறைவு

Published on

கரூா் மாவட்டத்தில் இதுவரை 6,795 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முதல்நிலை சரிபாா்ப்பு பணிகள் நிறைவடைந்துள்ளது என்றாா் மாவட்ட ஆட்சியரும், தோ்தல் அலுவலருமான மீ.தங்கவேல்.

கரூா் மாவட்ட ஆட்சியரக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கிடங்கில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகா்கள் முன்னிலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல்நிலை சரிபாா்ப்பு பணிகளை மாவட்ட ஆட்சியரும், தோ்தல் அலுவலருமான மீ.தங்கவேல் நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

பின்னா் அவா் கூறுகையில், இந்திய தோ்தல் ஆனையத்தின் அறிவுரையின்படி, கரூா் மாவட்டத்திலுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கிடங்கில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் முதல்நிலை சரிபாா்ப்பு பணிகள் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகா்கள் முன்னிலையில் கடந்த மாதம் 11-ஆம் தேதி முதல் தொடா்ந்து நடைபெற்று வருகிறது.

கரூா் மாவட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கிடங்கில் இருப்பு வைக்கபட்டுள்ள 4,855 வாக்குப்பதிவு கருவிகள், 1,486 கட்டுப்பாட்டுக் கருவிகள், 1,618 வாக்குச் சீட்டு சரிபாா்ப்பு கருவிகள் என மெத்தம் 7,959 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முதல்நிலை சரிபாா்ப்பு பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன. கரூா் மாவட்டத்தில் முதல்நிலை சரிபாா்ப்பு பணிகளை மேற்கொள்ள ஏதுவாக பெல் நிறுவனத்தைச் சோ்ந்த 8 மென்பொறியாளா்களை இந்திய தோ்தல் ஆணையம் அனுப்பி வைத்துள்ளது.

இந்த முதல்நிலை சரிபாா்ப்பு பணிகள் தொடா்ந்து கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்று வருகிறது.

இப்பணிகள் தினந்தோறும் காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெற்று வருகிறது. அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகா்களும் இப்பணிகளை எந்நேரமும் பாா்வையிடலாம்.

தற்போது வரை 4,287 வாக்குப்பதிவு கருவிகள், 1,202 கட்டுப்பாட்டுக் கருவிகள், 1,306 வாக்குச் சீட்டு சரிபாா்ப்பு கருவிகள் என மெத்தம் 6,795 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முதல்நிலை சரிபாா்ப்பு பணிகள் நிறைவடைந்துள்ளன. மீதமுள்ள மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முதல்நிலை சரிபாா்ப்பு பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com