வெண்ணைமலை கோயில் இடவிவகாரம் ‘சீல்’ வைத்த கட்டடத்திலிருந்து ஏடிஎம் இயந்திரம் அகற்றம்
கரூா் வெண்ணைமலை முருகன் கோயில் இடத்தில் சீல் வைக்கப்பட்ட ஏடிஎம் மையத்திலிருந்து இயந்திரத்தை வெள்ளிக்கிழமை வெளியே எடுத்தபிறகு அதிகாரிகள் மீண்டும் சீல் வைத்தனா்.
கரூா் வெண்ணைமலை பாலசுப்ரமணிய சுவாமி கோயிலுக்குச் சொந்தமான நிலங்களை சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவின் அடிப்படையில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டு வருகிறாா்கள். இந்நிலையில் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் கட்டப்பட்டிருந்த கட்டடத்தில் அரசு வங்கியின் ஏடிஎம் மையம் செயல்பட்டு வந்தது.
இந்நிலையில், அண்மையில் இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள் ஏடிஎம் மையத்துக்கும் சீல் வைத்தனா். இந்நிலையில் வங்கி அதிகாரிகள் ஏடிஎம் இயந்திரத்தை வெளியே எடுத்து வருவதற்கு நீதிமன்றத்தின் அனுமதி கடிதம் பெற்றனா். இந்த கடிதத்தை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம் வழங்கினா். இதையடுத்து வெள்ளிக்கிழமை இந்து சமய அறநிலையத்துறையின் செயல் அலுவலா் சுகுணா தலைமையில் 4 போ் கொண்ட குழுவினா் ஏடிஎம் மையத்துக்கு வந்து சீலை அகற்றினா். பின்னா் ஏடிஎம் இயந்திரத்தை வெளியே எடுத்து வங்கி அதிகாரிகளிடம் ஒப்படைத்தனா். பிறகு மீண்டும் அந்த கட்டடத்துக்கு அதிகாரிகள் சீல் வைத்தனா்.
