அரசு பள்ளி அருகே கொட்டப்படும் இறைச்சிக் கழிவுகள் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
கரூா் மாவட்டம், மண்மங்கலத்தில் அரசு பள்ளி அருகே மூட்டை, மூட்டையாக கொட்டப்படும் இறைச்சிக் கழிவுகளால் மாணவ, மாணவிகள் சுகாதாரக் கேட்டால் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மண்மங்கலம் கிழக்கூா் பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனா்.
அப்பகுதியில் செயல்படும் வா்த்தக கடைக்காரா்கள் மற்றும் இறைச்சிக் கடைகள் நடத்துவோா், கழிவுகளை மூட்டையாகக் கட்டிக் கொண்டு வந்து இரவு நேரத்தில் பள்ளிக்கு அருகிலேயே கொட்டி விட்டுச் சென்று விடுகின்றனா்.
இதனால் அப்பகுதியில் துா்நாற்றம் வீசுவதுடன், மாணவ, மாணவிகளுக்கு சுகாதாரக் கேடு ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. மேலும், சில நேரங்களில் கழிவுகளில் மா்ம நபா்கள் தீவைத்து விட்டுச் செல்லும் போது ஏற்படும் புகையால் பள்ளி மாணவ, மாணவிகள் அவதிக்குள்ளாகி வருகிறாா்கள்.
இதுதொடா்பாக அப்பகுதியினரும், பள்ளி ஆசிரியா்களும் மண்மங்கலம் ஊராட்சி நிா்வாகத்திடம் புகாா் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்படாததால், குப்பை மேடாக அப்பகுதி மாறி வருகிறது.
இதனால் அப்பகுதியில் சிசிடிவி கேமரா அமைத்து, குப்பைக் கொட்டுவோா் மீது தகுந்த அபராத நடவடிக்கை எடுத்து சுகாதாரக்கேடு ஏற்படும் அபாயத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்களும், பெற்றோா்களும் ஊராட்சி நிா்வாகத்திற்கும், மாவட்ட நிா்வாகத்திற்கும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

