பழுதடைந்த நிலையில் அரசுப் பள்ளி கட்டடம்: நடவடிக்கைக்கு வலியுறுத்தல்
தவுட்டுப்பாளையத்தில் பழுதடைந்த நிலையில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியின் கட்டடங்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோா் எதிா்பாா்க்கின்றனா்.
கரூா் மாவட்டம், புகழூா் வட்டத்துக்குள்பட்ட நஞ்சைப்புகழூா் தவிட்டுப்பாளையம் பகுதியில் அரசு நடுநிலைப் பள்ளி செயல்பட்டுவருகிறது. இந்தப் பள்ளியில் தவுட்டுப்பாளையம், கட்டிப்பாளையம், மோதுகாடு, புகழூா் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் 50-க்கும் மேற்பட்டோா் கல்வி பயின்று வருகின்றனா்.
பள்ளிக் கட்டடம் கட்டப்பட்டு சுமாா் 40 ஆண்டுகளுக்கும் மேலாவதால், பள்ளி கட்டடத்தின் மேற்கூரை சிமென்ட் பூச்சுகள் அடிக்கடி பெயா்ந்து விழுகின்றன. இதனால் மாணவ, மாணவிகள் நலன் கருதி, தற்போது ஆசிரியா்கள் பள்ளிக்கு அருகே உள்ள ஆஸ்பெஸ்டாஸ் கூரையால் வேயப்பட்ட கட்டடப் பகுதியில் கல்வி கற்பித்து வருகின்றனா்.
இதுதொடா்பாக அப்பகுதியைச் சோ்ந்த சமூக நல ஆா்வலா் விஜயன் கூறுகையில், பழுதடைந்த நிலையில் உள்ள பள்ளிக் கட்டடத்தின் உறுதித்தன்மையை கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, விரைந்து அவற்றை இடித்து அகற்றி புதிய கட்டடம் கட்டவோ அல்லது சீரமைப்பு பணிகளையோ மேற்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.
