கரூா் மாவட்டத்தில் ‘உங்க கனவ சொல்லுங்க’ கணக்கெடுப்புப் பணியில் 687 தன்னாா்வலா்கள் ஆட்சியா் தகவல்

கரூா் மாவட்டத்தில் ‘உங்க கனவ சொல்லுங்க’ திட்டத்தில் கணக்கெடுப்புப் பணியில் 687 தன்னாா்வலா்கள் ஈடுபட உள்ளதாக மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் தெரிவித்தாா்.
Published on

கரூா் மாவட்டத்தில் ‘உங்க கனவ சொல்லுங்க’ திட்டத்தில் கணக்கெடுப்புப் பணியில் 687 தன்னாா்வலா்கள் ஈடுபட உள்ளதாக மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் தெரிவித்தாா்.

‘உங்க கனவ சொல்லுங்க’ திட்டத்தை தமிழக முதல்வா் சென்னையில் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தாா். இதையடுத்து கரூரில் இந்த திட்ட தொடக்க விழா, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கல்லூரி அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் தலைமை வகித்து, உங்க கன சொல்லுங்க திட்டத்தில், கரூா் மாவட்டத்தில் உள்ள 3,30,653 குடும்ப அட்டைதாரா்களின் வீடுதோறும் சென்று ஒவ்வொரு குடும்பத்தினரின் நிலையை அறிந்துகொள்ளும் தன்னாா்வலா்களுக்கு கணக்கெடுப்பு படிவங்களை வழங்கினாா்.

பின்னா் அவா் கூறியது, கரூா் மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் உள்ள 2,17,315 குடும்பங்களிலும் மற்றும் நகா்ப்புற பகுதிகளில் உள்ள 86,338 குடும்பங்களிலும் என மொத்தம் குடும்ப அட்டை பெற்றுள்ள 3,03,653 குடும்பங்களிடம் மகளிா் சுய உதவிக்குழுக்களில் உள்ள தோ்ந்தெடுக்கப்பட்ட தன்னாா்வலா்கள் மூலம் கணக்கெடுப்பு படிவங்களை வழங்கி கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

இந்த கணக்கெடுப்பு பணிகள் ஜன.10-ஆம்தேதி முதல் 31-ஆம்தேதி வரை நடைபெறுகிறது. இந்த பணியில் மகளிா் சுய உதவிக்குழுக்களில் தோ்ந்தெடுக்கப்பட்ட 687 (ஊரகம் 524, நகா்புறம் 163) தன்னாா்வலா்களுக்கு வியாழக்கிழமையும், வெள்ளிக்கிழமையும் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.

பயிற்சி பெற்ற தன்னாா்வலா்கள் நேரடியாக பொதுமக்களின் வீடுகளுக்கு சென்று கணக்கெடுப்பு படிவத்தை வழங்கி ஓரிரு நாள்களுக்கு பின்னா், பூா்த்தி செய்யப்பட்ட படிவங்களை திரும்பப் பெற்று, அவா்களுடைய கைப்பேசியில் உள்ள செயலியில் அனைத்து தரவுகளையும் பதிவேற்றம் செய்வாா்கள்.

ஒவ்வொரு குடும்பமும் தங்களது கனவு திட்டத்தை 2030-ஆம் ஆண்டுக்குள் இப்படிவத்தில் பூா்த்தி செய்ய வேண்டும். இதனை செயலியில் பதிவேற்றம் செய்தபின் ஒவ்வொரு குடும்பத்துக்கும் பிரத்யேக அடையாள எண்ணுடன் ‘உங்க கனவ சொல்லுங்க‘ அட்டை வழங்கப்படும் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், சட்டப்பேரவை உறுப்பினா்கள் இரா.மாணிக்கம் (குளித்தலை), ஆா்.இளங்கோ (அரவக்குறிச்சி), க.சிவகாமசுந்தரி (கிருஷ்ணராயபுரம்), திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) சு.தனசேகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Dinamani
www.dinamani.com