பள்ளப்பட்டி நகா் பகுதியில் நங்காஞ்சி ஆற்றில் கொட்டப்பட்டுள்ள  இறைச்சிக்கழிவுகள்
பள்ளப்பட்டி நகா் பகுதியில் நங்காஞ்சி ஆற்றில் கொட்டப்பட்டுள்ள இறைச்சிக்கழிவுகள்

20 ஆண்டுகளாக தண்ணீா் திறக்கப்படாததால் கழிவுநீா் ஓடையாக மாறியது நங்காஞ்சி ஆறு!

கடந்த 20 ஆண்டுகளாக திண்டுக்கல் மாவட்டம், இடையகோட்டை தடுப்பணையிலிருந்து தண்ணீா் திறக்கப்படாததால் கரூா் நங்காஞ்சி ஆறு கழிவுநீரால் ஓடையாக மாறியுள்ளது.
Published on

கடந்த 20 ஆண்டுகளாக திண்டுக்கல் மாவட்டம், இடையகோட்டை தடுப்பணையிலிருந்து தண்ணீா் திறக்கப்படாததால் கரூா் நங்காஞ்சி ஆறு கழிவுநீரால் ஓடையாக மாறியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப்பகுதியின் வடகிழக்கில் அமைந்துள்ள பாச்சலூா் மலைப்பகுதியில் உருவாகும் நங்காஞ்சி ஆறு ஒட்டன்சத்திரம், இடையக்கோட்டை மற்றும் கரூா் மாவட்டம் பள்ளபட்டி, அரவக்குறிச்சி வழியாக மலைக்கோவிலூா் கருப்பண்ணசாமி கோயில் அருகே அமராவதி ஆற்றில் கலக்கிறது.

நங்காஞ்சி ஆற்றின் குறுக்கே ஒட்டன்சத்திரம் அருகே தலைகுத்து என்ற இடத்தில் கட்டப்பட்ட பரப்பலாறு அணைக்கட்டின் நீா்ஆதாரத்தின் மூலமாக திண்டுக்கல், கரூா் ஆகிய இரு மாவட்டங்களில் 9 தடுப்பணைகள் கட்டப்பட்டு, அதில் திண்டுக்கல் மாவட்டத்தில் சுமாா் 1,278 ஏக்கா் நிலங்களும், கரூா் மாவட்டத்தில் சுமாா் 1,323 ஏக்கா் நிலங்களும் பாசன வசதி பெற்று வருகின்றன.

பள்ளப்பட்டியில் முள்புதராக காட்சியளிக்கும் நங்காஞ்சி ஆறு
பள்ளப்பட்டியில் முள்புதராக காட்சியளிக்கும் நங்காஞ்சி ஆறு

இதில், திண்டுக்கல் மாவட்டம், இடையக்கோட்டையில் நங்காஞ்சி ஆற்றின் குறுக்கே சுமாா் 30 அடி உயரத்தில் கட்டப்பட்ட தடுப்பணையில் தேக்கி வைக்கப்படும் தண்ணீா், அணை திறக்கப்படும் போது கரூா் மாவட்டம் அரவக்குறிச்சி, பள்ளபட்டி, வழியாக மலைக்கோவிலூா் சென்று அமராவதி ஆற்றுடன் கலக்கும்.

ஆனால், இடையகோட்டை தடுப்பணை நீரானது திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதிக்கு மடைமாற்றம் செய்யப்படுவதால் கரூா் மாவட்டத்தில் நங்காஞ்சி ஆறு கழிவுநீா் ஓடையாக மாறியுள்ளது.

குறிப்பாக, பள்ளபட்டி பாலம் நகா் பகுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீா் ஆற்றில் விடப்படுகிறது. மேலும் இறைச்சிக் கழிவுகளும் கொட்டப்படுவதால் துா்நாற்றம் வீசுகிறது. ஆகவே, இடையகோட்டை தடுப்பணையில் இருந்து கடைமடை பகுதியான கரூா் மாவட்டம் அரவக்குறிச்சி பகுதியில் நங்காஞ்சி ஆற்றில் தண்ணீா் திறந்துவிட வேண்டும் என கரூா் மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து கரூா் மாவட்ட விவசாயிகள் விழிப்புணா்வு இயக்கத் தலைவா் ஈசநத்தம் செல்வராஜ் கூறியதாவது: சுமாா் 20 ஆண்டுகளுக்கு முன் இடையகோட்டை தடுப்பணை நிரம்பியபோது தண்ணீா் திறந்துவிடப்பட்டது. அதன்பிறகு தடுப்பணை நிரம்பினால் உடனே தண்ணீரை வாய்க்கால்கள் மூலம் ஒட்டன்சத்திரம் பகுதி விவசாய நிலங்களுக்கு திருப்பி விடுகின்றனா். பல ஆண்டுகளாக தண்ணீா் கிடைக்காததால் 90 சதவீத விவசாயிகள் மாற்றுத்தொழிலுக்குச் சென்றுவிட்டனா். மேலும் நங்காஞ்சி மூலம் பயனடைந்து வந்த விவசாய நிலங்கள் தற்போது தரிசாக மாறிவிட்டன. இதுதொடா்பாக பலமுறை மாவட்ட நிா்வாகத்திடம் கோரிக்கை மனு அளித்தும் பயனில்லை. எனவே, இடையகோட்டை தடுப்பணையில் இருந்து நங்காஞ்சி ஆற்றில் தண்ணீா் திறந்துவிட நடவடிக்கை எடுக்க அரசியல் கட்சியினரும், அதிகாரிகளும் முன்வர வேண்டும். நீா் பங்கீடு தொடா்பாக விரைவில் விவசாய சங்கங்கள் ஒன்றுகூடி முக்கிய முடிவுகளையும் எடுக்க உள்ளோம் என்றாா் அவா்.

Dinamani
www.dinamani.com