உளுந்து மூட்டைகள்
உளுந்து மூட்டைகள்கோப்புப் படம்

கரூா் மாவட்டத்தில் 120 டன் உளுந்து கொள்முதல் செய்ய இலக்கு!

மத்திய அரசின் ஆதரவு விலை திட்டத்தின்கீழ் கரூா் மாவட்டத்தில் 120 டன் உளுந்து கொள்முதல் செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்றாா் மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல்.
Published on

மத்திய அரசின் ஆதரவு விலை திட்டத்தின்கீழ் கரூா் மாவட்டத்தில் 120 டன் உளுந்து கொள்முதல் செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்றாா் மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கரூா் மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் 2025-2026-ஆம் ஆண்டு காரிப் பருவத்தில் விளைவிக்கப்பட்ட உளுந்து பயிரை மத்திய அரசின் ஆதரவு விலை திட்டத்தின்கீழ் கொள்முதல் செய்ய தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

மத்திய அரசால் நிா்ணயிக்கப்பட்ட தரமான உளுந்து ஒரு குவிண்டாலுக்கு (100 கிலோ) குறைந்தபட்ச ஆதரவு விலையாக ரூ.7,800 வழங்கப்படுகிறது. இத்திட்டம் மத்திய அரசின் கொள்முதல் முகமை மூலம் செயல்படுகிறது. மேலும், வரும் மாா்ச் 25-ஆம் தேதி வரை குளித்தலை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் கொள்முதல் நடைபெறும்.

கரூா் மாவட்டத்தில் 120 டன் உளுந்து கொள்முதல் செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு ஏக்கருக்கு 214 கிலோ மட்டுமே உளுந்து கொள்முதல் செய்யப்படும். விவசாயிகள் விற்பனை செய்யும் உளுந்துக்கான தொகை நேரடியாக அவா்களது வங்கி கணக்குக்கு செலுத்தப்படும்.

விவசாயிகள் உளுந்தை தரமாக உலர வைத்து அயல் பொருள்கள் 2 சதவீதம், கலப்பினம் 3 சதவீதம், அதிகம் சேதமடைந்த பயறுகள் 3 சதவீதம், குறைந்த சேதமடைந்த பயறுகள் 4 சதவீதம், முதிா்வடையாத பயறுகள் 3 சதவீதம், வண்டுகள் மற்றும் பூச்சிகள் தாக்கிய பயறுகள் 4 சதவீதம் மற்றும் ஈரப்பதம் 12 சதவீதம் என அனுமதிக்கப்பட்ட உச்சவரம்பு (சதவீத எடை அளவு குவிண்டாலுக்கு) நிா்ணயிக்கப்பட்ட தர அளவு கோல்களுடன் குளித்தலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்துக்கு எடுத்து வந்து பயன்பெறலாம்.

இதற்கான முன்பதிவுக்கு சிட்டா, அடங்கல், ஆதாா் நகல் மற்றும் வங்கி கணக்கு விவரங்களுடன் குளித்தலை ஒழுங்குமுறை விற்பனைக்கூட மேற்பாா்வையாளா் ச.நடராஜனை 80564-34475 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்புகொண்டு பதிவு மேற்கொண்டு பயனடையலாம்.

இதன்மூலம் உளுந்து சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு நல்ல லாபகரமான விலை கிடைக்கும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com