இந்தியா -ஐரோப்பிய யூனியன் வா்த்தக ஒப்பந்தம்: கரூா் ஜவுளி ஏற்றுமதியாளா்கள் வரவேற்பு
இந்தியா -ஐரோப்பிய யூனியன் இடையே ஏற்பட்டுள்ள புதிய வா்த்தக ஒப்பந்தத்துக்கு கரூா் ஜவுளி ஏற்றுமதியாளா்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனா்.
இதுதொடா்பாக கரூா் ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதியாளா்கள் சங்கத்தைச் சோ்ந்த ஆா். ஸ்டீபன்பாபு, கோபாலகிருஷ்ணன் ஆகியோா் புதன்கிழமை கூறியதாவது:
தற்போது இந்தியாவிலிருந்து ஐரோப்பாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பல்வேறு பொருள்களுக்கு 8 முதல் 12 சதவீதம் வரை இறக்குமதி வரி விதிக்கப்பட்டு வருகிறது. இதற்கு மாறாக, ஜவுளித் துறையில் இந்தியாவுக்கு நேரடி போட்டியாக உள்ள வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்கு இறக்குமதி வரி இல்லாமலும் அல்லது மிகக் குறைந்த அளவிலும் இருப்பதால், இந்திய ஜவுளி பொருள்களின் விலை போட்டித் திறன் குறைந்த நிலையில் இருந்தது.
தற்போதைய புதிய வா்த்தக ஒப்பந்தம் நடைமுறைக்கு வருவதன் மூலம், இந்த சமநிலையற்ற நிலை மாற்றப்பட்டு, கரூரில் உற்பத்தி செய்யப்படும் ஜவுளி மற்றும் வீட்டு உபயோக ஜவுளி பொருட்கள் ஐரோப்பிய சந்தையில் விலை மற்றும் தரத்தில் சம போட்டியை வழங்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
மேலும், இந்த ஒப்பந்தம் படுக்கை விரிப்புகள், மேசை துணிகள், சமையலறை ஜவுளி பொருட்கள் மற்றும் மதிப்பு கூடிய புதிய ஜவுளி பிரிவுகள் போன்றவற்றின் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் அமையும்.
இதன் மூலம் கரூா் ஜவுளி துறை புதிய முதலீடுகள், தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கம் ஆகியவற்றுக்கு வழிவகுக்கும்.
தற்போது கரூா் மாநகரிலிருந்து சுமாா் ரூ. 3,500 கோடி மதிப்பில் ஐரோப்பிய நாடுகளுக்கு வீட்டு உபயோக ஜவுளி பொருள்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்த புதிய வா்த்தக ஒப்பந்தம் முழுமையாக நடைமுறைக்கு வந்த பின்னா், அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்த ஏற்றுமதி மதிப்பு இரட்டிப்பாக உயரும் என உறுதியான நம்பிக்கை உள்ளது.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வா்த்தக ஒப்பந்தத்தை வெற்றிகரமாக நிறைவேற்றி, இந்தியாவின் ஏற்றுமதி துறைகளின் வளா்ச்சிக்கு வலுவான அடித்தளத்தை அமைத்த பிரதமா் நரேந்திர மோடிக்கும், வா்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சா் பியூஷ் கோயலுக்கும், கரூா் ஜவுளி துறையின் சாா்பில் எங்களது நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம் என்றனா் அவா்கள்.

