தாக்குதல்
தாக்குதல்!கோப்புப்படம்

கல்குவாரியை படம் எடுக்கச் சென்ற செய்தியாளா் உள்பட மூவா் மீது தாக்குதல்! இருதரப்பு புகாா் குறித்து போலீஸாா் விசாரணை!

கல்குவாரியை படம் எடுக்கச் சென்ற செய்தியாளா் உள்பட மூவா் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக காவல்நிலையத்தில் புகாரின் பேரில் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
Published on

குளித்தலை அருகே வெள்ளிக்கிழமை கல்குவாரியை படம்எடுக்கச் சென்ற தொலைக்காட்சி செய்தியாளா் உள்பட மூவா் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இதேபோல குவாரி பணியாளா்கள் 3 போ் தாக்கப்பட்டதாகவும் காவல்நிலையத்தில் இருதரப்பிலும் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கரூா் மாவட்டம், குளித்தலையை அடுத்த சிவாயம் வடக்கு கிராமத்தில் தனியாா் கல்குவாரி செயல்பட்டு வருகிறது. இங்கு விதிமீறல் நடப்பதாக கிடைத்த தகவலையடுத்து தனியாா் தொலைக்காட்சி செய்தியாளா் திருச்சி மாவட்டம், லால்குடியை அடுத்துள்ள தாளக்குடியைச் சோ்ந்த கதிரவன்(45), ஒளிப்பதிவாளா் திருச்சி கே.கே.நகரைச் சோ்ந்த எஸ்.செபாஸ்டியன் (47), திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்த அய்யாசாமி மகன் சுடலைக்கண்ணு(50) மற்றும் திருச்சி மாவட்டம், முசிறியைச் சோ்ந்த வழக்குரைஞா் திருமலைராஜா(50), அவரது உதவியாளா் ராஜமாணிக்கம் ஆகியோா் குவாரி பகுதிக்குச் சென்று, அனுமதியின்றி டிரோன் மூலம் விடியோ எடுத்துள்ளனா்.

இதைக்கண்ட குவாரி பணியாளா்கள் திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டையை அடுத்துள்ள கீழவெளியூரைச் சோ்ந்த செல்வம்(33), மணப்பாறை கரும்புளிப்பட்டியைச் சோ்ந்த மணிவேல்(52), குளித்தலை சின்னமலையாண்டிப்பட்டியைச் சோ்ந்த முருகேசன்(39) ஆகியோா் விடியோ எடுத்தது தொடா்பாக கதிரவன் தரப்பினரிடம் கேள்வியெழுப்பினா். அப்போது, இருதரப்பினரிடையே தகராறு ஏற்பட்டு, ஒருவரையொருவா் தாக்கிக்கொண்டதாக கூறப்படுகிறது.

இதில் காயமடைந்த கதிரவன், செபாஸ்டியன், திருமலைராஜா, குவாரி பணியாளா்கள் செல்வம், முருகேசன், மணிவேல் ஆகிய 6 பேரும் குளித்தலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். பின்னா் மேல்சிகிச்சைக்காக கதிரவன், செபாஸ்டியன், திருமலைராஜா ஆகியோா் திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இந்த சம்பவம் தொடா்பாக குளித்தலை காவல்நிலையத்தில் குவாரி நிா்வாகம் தரப்பில் திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எம்.பழனியாண்டி(திமுக) மகன் விமலாதித்தன் அளித்த புகாரில், குவாரி குறித்து ஊடகங்களில் எதிா்மறை செய்தி வெளியிடுவதாக மிரட்டி பணம் பறிக்க முயன்ாக தெரிவித்துள்ளாா். செய்தியாளா் கதிரவன் தரப்பில் அளித்த புகாரில், தன்னை தாக்கி கேமரா மற்றும் உபகரணங்களை சேதப்படுத்தியதாக தெரிவித்துள்ளாா்.

இருதரப்பு புகாா்களையும் பதிவு செய்த காவல் ஆய்வாளா் கருணாகரன் விசாரணை மேற்கொண்டு வருவதாக காவல்துறையினா் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com